

செ
ன்ற ஆண்டு தொடக்கத்தில் ரியல் எஸ்டேட் அதற்கு முந்தைய ஆண்டான 2016-ன் சரிவுகளில் இருந்து மீளும் முகமாக இருந்தது. ஆனால், 2017 இரண்டாவது அரையாண்டு ரியல் எஸ்டேட்டுக்குச் சாதகமாக இருக்கவில்லை என்பதை இந்த ஆண்டில் வெளியான ரியல் எஸ்டேட் தொடர்பான பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் சென்ற ஆண்டின் ரியல் எஸ்டேட் மந்த நிலைக்கான மற்றொரு ஆதாரமாக இக்ரோ அறிக்கை வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் வெளியான நைட்பிராங்க் ரியல் எஸ்டேட் ஆய்வு அறிக்கை கடந்த பத்து ஆண்டில் இல்லாத அளவுக்கு ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி 56 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மதிப்பிட்டது. இந்திய ரியல் எஸ்டேட் தொடர்பாக ஆண்டுதோறும் ஆய்வுகள் மேற்கொண்டு வரும் இந்நிறுவனத்தின் அறிக்கை இந்திய அளவில் 2,44,686 ஆக இருந்த வீட்டு விற்பனை 2017-ல் 2,28,072 ஆகச் சரிவடைந்துள்ளது. அதுபோல புதிய வீட்டுத் திட்டங்கள் 1,75,822லிருந்து 1,03,570 ஆகச் சரிவடைந்துள்ளது எனத் தெரிவித்தது. இப்போது வெளிவந்துள்ள இக்ரோ அறிக்கை.
சென்ற ஆண்டின் முதல் காலாண்டில் 3.3 சதவீதம் இருந்த சிமெண்ட் பயன்பாடு இரண்டாம் காலாண்டில் 0.4 சதவீதம் குறைந்து என அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம், இந்த ஆண்டில் அதிகரித்த மணல் தட்டுப்பாடு, ஜி.எஸ்.டி., 2016-ன் இறுதியில் மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை இவை எல்லாம் இந்தத் தேக்கத்துக்குக் காரணமாக இருக்கக்கூடும். கட்டுமானப் பணிகள் குறைந்து சிமெண்ட் பயன்பாடும் குறைந்திருக்கிறது என மேலும் அந்த அறிக்கை கூறுகிறது.
ஆனால், இந்த சிமெண்ட் பயன்பாடு பண மதிப்பு நீக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட நவம்பர் 2016 உடன் ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது. ஏப்ரல் - நவம்பர் 2016-ஐ காட்டிலும் ஏப்ரல் - நவம்பர் 2017-ல் சிமெண்ட் பயன்பாடு 0.6 சதவீதம் அதிகரித்துள்ளது. 188.8 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த சிமெண்ட் 2017-ல் 190 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.
வட இந்திய அளவில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களில் சிமெண்ட் பயன்பாடு குறைந்ததற்கான காரணம் அங்குள்ள மணல் தட்டுப்பாடு ஆகும். மேற்கு இந்தியாவில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் இந்தப் பாதிப்பை விளைவித்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களின் தேக்கத்துக்கான காரணங்களாக இங்கு நிலவும் மணல் தட்டுப்பாட்டையும் பலவீனமான வீட்டுக் கட்டுமானத் திட்டங்களையும் இந்த அறிக்கை முன்வைக்கிறது.
அது சிமெண்ட் விலையும் உயரும் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது. மேற்கு, கிழக்கு இந்திய மாநிலங்களில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 25லிருந்து 35 ரூபாய்வரை அதிகரிக்கும் எனச் சொல்கிறது. வட இந்தியாவிலும் ஏறத்தாழ அதுபோன்று சிமெண்ட் விலை அதிகரிக்கும். நாட்டில் குறைந்த அளவாகத் தென்னிந்தியாவில் ₹10 அளவுக்கு உயரும் எனவும் சொல்கிறது. அதுபோல சிமெண்ட் பயன்பாடும் 2 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டு வெளியான உலக சிமெண்ட் அமைப்பின் அறிக்கை இந்த ஆண்டு 1.5 சதவீதம் சிமெண்ட் பயன்பாடு அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டிருந்தது.
ரியல் எஸ்டேட் தொடர்பாக வெளியாகிவரும் இந்த அறிக்கைகள் மூலம் அந்தத் துறையின் இன்றைய நெருக்கடி நிலை தெளிவாகிறது. இது வீடு வாங்குவோரையும் மறைமுகமாகப் பாதிக்கக்கூடியது. இதிலிருந்து வரும் காலங்களில் ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு மணல் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளைக் களைவது அவசியம்.