Published : 10 Feb 2018 11:18 am

Updated : : 10 Feb 2018 12:28 pm

 

காதல் செய்வோம்: காதல் சொல்லும் கட்டிடங்கள்

 

கா

தலர் தினமான பிப்ரவரி 14, உலகக் காதலர்களின் புத்தாண்டாகவே பார்க்கப்படுகிறது. பூச்செண்டு, பலவித பொம்மைகள், சாக்லெட், நகைகள் போன்றவற்றைத்தான் பலரும் காதல் பரிசாகக் கொடுப்பார்கள். சிலர் தங்கள் காதலின் ஆழத்தை வெளிப்படுத்த கடினமான பாறைகளையும் கவித்துவம் மிக்க கட்டிடங்களாக மாற்றியிருக்கிறார்கள்.

காதல் சின்னமான தாஜ்மகாலும் அப்படி உருவானதுதான். முகலாய அரசர் ஷாஜகான் தன் மனைவி மும்தாஜின் நினைவாக 16-ம் நூற்றாண்டில் கட்டிய கட்டிய காதல் கோட்டை அது. உலகம் முழுக்க இது போல கட்டப்பட்ட காதல் கட்டிடங்கள், காதலின் அழிவின்மைக்குச் சாட்சியாக நிற்கின்றன.

உக்ரைன் நாட்டில் உள்ள கேஸ்பர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது ஸ்வாலோ நெஸ்ட் அரண்மனை. கருங்கடலில் சுமார் 130 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இதை ரஷ்ய நாட்டைச் சேர்ந்த அரோரா கிளிஃப், மரப்பலகைகளைக் கொண்டு கட்டினார்.


மனைவிக்காகக் கட்டிய இந்தக் கட்டிடத்துக்கு அவர் ‘காதல் கோட்டை’ எனப் பெயரிட்டிருந்தார். அவரது மறைவுக்குப் பிறகு அதைப் பல தொழிலதிபர்கள் விலைக்கு வாங்கியுள்ளனர். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் பேரோன் வான் ஸ்டீஞ்ஜெல், இந்தக் கட்டிடத்தைப் புதுப்பித்துத் தற்போதுள்ள தோற்றத்தைக் கொடுத்துள்ளார்.

நியூயார்க்கில் உள்ள ஹார்ட் தீவில் அமைக்கப்பட்டுள்ளது ‘போல்ட் கோட்டை’. 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜார்ஜ் சி போல்ட், தன் மனைவி லூயிஸுக்காக இந்தக் கோட்டையைக் கட்டத் தொடங்கினார். ஆனால், கட்டிட வேலை ஆரம்பித்த நான்கு மாதங்களிலேயே மாரடைப்பால் லூயிஸ் இறந்துவிட்டார்.

மனைவியின் இறப்பால் மனமுடைந்த போல்ட், கட்டுமானப் பணிகளை நிறுத்தியதோடு, அந்தத் தீவுக்கு வருவதையும் நிறுத்திவிட்டார். இந்தத் தனித்துவமான கோட்டையை அமெரிக்க அரசு சீரமைத்து, சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்குத் திறந்துவைத்துள்ளது.

அரண்மனைகளுக்குப் பெயர் பெற்ற பிரான்ஸ் நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது ‘பெடிட் ட்ரியனன்’. இது 15-ம் கிங் லூயி மன்னரால் கட்டப்பட்டது. தன் நீண்டநாள் காதலி டி பெம்பெடியூர் என்பவருக்காக அவர் இந்தக் கட்டிடத்தைக் கட்டினார்.

மர்ம கோட்டை என அழைக்கப்படும் இது, அரிசோனாவில் உள்ள ஃபீனிக்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. பாய்ஸ் லூதர் கல்லி என்பவரிடம் அவருடைய ஐந்து வயது மகள் மேரி லூ, ஒரு கோட்டை வேண்டும் எனக் கேட்டுள்ளார். தன் மகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காகக் காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்தபோதும் தன் அன்றாடப் பணிகளைக் கவனித்துக்கொண்டே 18 அறைகள் கொண்ட இந்தக் கோட்டையை லூதர் கட்டியுள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் அமைந்துள்ள டோபிராய்டு அரண்மனை, அந்நாட்டின் முக்கிய அரண்மனையாக இது கருதப்படுகிறது. 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆலை உரிமையாளரான ஜான் ஃபீல்டன், தன் ஆலையில் பணிபுரிந்துவந்த ரூத் ஸ்டான்ஸ்பீல்டு என்பவரைக் காதலித்துத் திருமண செய்துகொண்டார்.

காதல் மனைவிக்காக ஜான் கட்டிய இந்த அரண்மனையில் 66 படுக்கைஅறைகள் உள்ளன.

இங்கிலாந்தில் அமைக்கப்பட்டுள்ள ஆஷ்டன் மெமோரியல் கோட்டை, ‘வடக்கு தாஜ்மகால்’ என்று அழைக்கப்படுகிறது. வில்லியம்சன் பூங்காவில் உள்ள மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கோட்டையைத் தொழிலதிபரான லார்ட் ஆஷ்டன் கட்டினார். தன் இரண்டாவது மனைவி ஜெஸியின் நினைவாக அவர் இதைக் கட்டியுள்ளார்.

ஜப்பான் நாட்டில் கியோடோ பகுதியில் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோடெய் ஜீ கோயிலை கீடானோ மண்டகோரா என்ற பெண்மணி தன்னுடைய கணவரின் நினைவாகக் கட்டியுள்ளார். தன்னுடைய இறுதிக்காலத்தை கீடோனோ இந்தக் கட்டிடத்தில் கழித்தார்.

Popular Articles

You May Like

More From This Category

More From this Author