

ந
ம்மில் பலரும் ‘கஃபே’க்களின் உள் அலங்கார வடிவமைப்பின் ரசிகர்களாக இருப்போம். வீட்டிலும் அந்த வடிவமைப்பைப் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருப்போம். அந்த உள் அலங்கார வடிவமைப்பு உத்திகளை வீட்டில் எப்படிப் பயன்படுத்துவது என்று தயக்கத்தில் அந்த முயற்சியைக் கைவிட்டிருப்போம். ஆனால், இப்போது வீடுகளில் கஃபே அலங்கார உத்திகளைப் பயன்படுத்தும் போக்கு பிரபலமாகிவருகிறது. கஃபேவை வீட்டுக்குள் அமைப்பதற்கான சில யோசனைகள்…
சமையலறையில் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்வதால் ஒரு கஃபேவின் தோற்றத்தை உருவாக்க முடியும். உதாரணமாக, சமையலறையின் மேசையில் கஃபேவில் இருப்பதைப் போன்ற நாற்காலிகளைப் போடலாம். இது கஃபேவில் சாப்பிடுவதைப் போன்ற உணர்வை அளிக்கும்.
வீட்டின் மூலைகளில் மர பெஞ்சுகளை ‘எல்’ அல்லது ‘யூ’ வடிவத்தில் அமைக்கலாம். இந்த பெஞ்சுகளில் கைவைத்த நாற்காலிகள், ஸ்டூல்கள் என இரண்டையும் பயன்படுத்தலாம். இதுவும் வீட்டின் மூலையில் ‘கஃபே’ இருப்பதைப் போன்ற தோற்றத்தைக் கொடுக்கும்.
சுவரில் கஃபேவில் இருப்பதைப் போன்ற கரும்பலகை அல்லது பச்சைநிறப் பலகையைப் பொருத்தலாம். அந்தப் பலகையில் வீட்டில் தயாரிக்கப்படும் அன்றைய உணவு வகைகளின் பெயர்களை ‘மெனு சார்ட்’ போல எழுதிவைக்கலாம்.
பெரும்பாலான ‘கஃபே’க்கள் திறந்த அலமாரிகளுடன்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதனால், வீட்டின் வரவேற்பறை அல்லது சமையலறையில் திறந்த அலமாரிகளில் பொருட்களை அடுக்கிவைக்கலாம்.
கஃபேக்களின் தோற்றத்தை வீட்டில் கொண்டுவருவதற்கு இன்னும் எளிமையான வழி ‘காமிக்’ சுவரொட்டிகள். வீட்டில் நீங்கள் அமைக்கும் ‘காமிக்’ சுவரொட்டிகளில் நகைச்சுவையான வாசகங்களை எழுத மறந்துவிடாதீர்கள்.
வீட்டின் மேசைகளிலும் மூலைகளிலும் உட்புற அலங்காரச் செடிகளை அமைக்கலாம். இந்தச் செடிகளை கஃபேவில் எப்படி வைத்திருப்பார்களோ, அதே மாதிரி வைக்கலாம். வீட்டின் ஜன்னல்களிலும் நுழைவாயிலிலும் செடிகளைத் தொட்டிகளில் தொங்கவிடலாம்.
வீட்டை வடிவமைக்க உலோகப் பொருட்களைப் பயன்படுத்தலாம். இந்த உலோகப் பொருட்களைப் பல்வேறு வண்ணங்களில் தேர்ந்தெடுக்கலாம். விளக்குகள், நாற்காலிகளின் கைப்பிடிகள், காஃபி மெஷின் போன்ற பொருட்களை விதவித உலோக வண்ணங்களில் தேர்ந்தெடுக்கலாம்.
காஃபியின் நிறமான ‘பிரவுன்’ வண்ணத்தத்தை பல கஃபேக்களின் வடிவமைப்பு நிறமாகப் பயன்படுத்தியிருக்கும். அதனால், வீட்டிலும் ‘கஃபே’ தோற்றத்தைக் கொண்டுவர நினைப்பவர்கள், பிரவுன் நிறத்தில் அறைக்கலன்கள், தரைவிரிப்புகள், சுவரொட்டிகள், மர அலங்காரப் பொருட்கள் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
பல கஃபேக்கள் வண்ண வண்ண ‘ஃப்ளோரல் பேட்டர்ன்’களை நாற்காலிகளுக்கும் சுவர்களுக்கும் பயன்படுத்தியிருப்பார்கள். வண்ணங்களை விரும்புபவர்களாக இருந்தால், கஃபேவின் இந்த வடிவமைப்பு உத்தியை வீட்டிலும் பயன்படுத்தலாம்.