

வ
சந்த காலத்துக்கு ஏற்றமாதிரி சமையலறை வடிவமைப்பை மாற்றுவதற்கு எளிமையான வழிகள் இருக்கின்றன. சமையலறையின் திரைச்சீலைகள், மேசைகள், சுவர்கள் போன்றவற்றின் வடிவமைப்பை மாற்றுவதன் மூலம் சமையலறையில் வசந்தம் வீசவைக்க முடியும். சமையலறையில் வசந்த காலத்தை வரவைப்பதற்கான சில ஆலோசனைகள்...
பூக்களையும் வசந்த காலத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. அதனால் பூக்களைக் கருப்பொருளாக வைத்து சமையலறையை வடிவமைக்கலாம். சமையலறையில் சுவர்களில் வண்ணமயமான பூக்களைச் சுவரொட்டிகளாக ஒட்டிவைக்கலாம். அப்படியில்லாவிட்டால், சுவர்களில் பூக்களைப் புடைப்புச் சிற்பங்களாகவும் அமைக்கலாம். இவை எல்லாவற்றையும்விடச் சமையலறைக்குள் பூச்சாடிகளை வைப்பது எளிமையானது. இந்தப் பூச்சாடிகள் சமையலறைக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.
அடுப்படி மேசைக்குப் பின்னால் இருக்கும் சுவர்களில் முழுமையாகப் பூக்கள் நிறைந்த ‘பேக்ஸ்பலாஷ்’ (Backsplash) வைத்து வடிவமைக்கலாம். இதனால் அடுப்படிச் சுவர்கள் பாதிப்படைவதைத் தவிர்க்கலாம். இந்த பேக்ஸ்பலாஷைச் சுத்தப்படுத்துவதும் எளிமையானது. இது சமையலறைக்குள் ஒரு பூக்கள் கூட்டம் நுழைந்துவிட்டதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கும். இந்த பேக்ஸ்பலாஷைக் கண்ணாடியிலும் உருவாக்கலாம். இது கூடுதல் வசீகரத்தைச் சமையலறைக்குக் கொடுக்கும். மஞ்சள், நீலம், சிவப்பு நிறப் பூக்களைக் கொண்டு இந்த பேக்ஸ்பலாஷை அமைக்கலாம்.
உங்கள் சமையலறைத் திரைச்சீலைகள் போடுவதற்கு வசதி இருக்கும்படி அமைந்திருந்தால் ‘ஃப்ளோரல்’ திரைச்சீலைகளைப் போடலாம். இது சமையலறைக்குள் வசந்தம் உண்மையிலேயே வந்துவிட்டதைப் போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். ஆனால், லேசான, வெளிச்சத்தைச் சமையலறைக்குள் கொண்டுவரும் பருத்தித் திரைச்சீலைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
வீட்டுக்குள் புடைப்புச் சிற்பங்களை அமைப்பது இப்போது புதிய டிரண்டாக உருவாகியிருக்கிறது. இந்தப் புடைப்புச் சிற்பங்களைச் சமையலறையிலும் அமைக்கலாம். இரண்டு ‘கான்ட்ராஸ்ட்’ (Contrast) வண்ணங்களில் பெரிய பூக்களாலான புடைப்புச் சிற்பத்தை அமைக்கலாம்.
எதிர்பார்க்காத வகையில் அலங்கரிப்பதும் வடிவமைப்பதும் ஒரு கலைதான். அப்படியும் சமையலறைக்குள் வசந்தத்தைக் கொண்டுவர முடியும். சமையலறைச் சுவர்களை அடர் நிறங்களால் மட்டுமே அலங்கரிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்கு மாறாக, சாம்பல் நிறத்தின் பின்னணியில் வெள்ளைப் பூக்கள் இருக்குமாறும் வடிவமைக்கலாம். இது ஒரு வித்தியாசமான அழகைச் சமையலறைக்குக் கொடுக்கும்.
வரவேற்பறையைப் பல்வேறு பொருட்களை வைத்து வடிவமைப்பதைப் போன்று, சமையலறையையும் அலங்கரிக்கலாம். படங்கள், அலங்காரமான கண்ணாடிகள், அலங்கார விளக்குகள் என எல்லாவற்றையும் சமையலறைக்கும் கொண்டுவரலாம். இது ஒரு பிரம்மாண்டமான தோற்றத்தைச் சமையலறைக்குக் கொடுக்கும்.
சமையலறையில் இருக்கும் மேசைத் துணியிலும் வசந்த காலம் பிரதிபலிப்பதைப் போல் வடிவமைக்கலாம். சமையலறைக்குள் பூக்களைக் கொண்டுவருவதற்கு இது ஒரு சிறந்த வழியாகும். இந்த மேசை விரிப்பை நீங்களேகூட வடிவமைக்கலாம். மேசை விரிப்பில் நீலம், சிவப்பு, மஞ்சள் நிறப் பூக்கள் இருப்பது நல்லது.
சமையலறையில் பயன்படுத்தும் பொருட்களை வானவில் நிறங்களில் வாங்கி அலமாரிகளில் அடுக்கலாம். அப்படியில்லையென்றால், உங்கள் சமையலறையை வடிவமைக்கத் தேர்ந்தெடுத்திருக்கும் வண்ணங்களில் இந்தப் பொருட்களை வாங்கலாம்.
உதாரணத்துக்கு, வானவில் வண்ணத்தில் குவளைகளை வாங்கி சமையலறை அலமாரியில் அடுக்குவது வசந்த காலக் கருப்பொருளுக்கு ஏற்றதாக இருக்கும்.
தட்டுகளும் உதவும்
பழமையைப் பிரதிபலிக்கும் பூக்களாலான தட்டுகளை வைத்தும் சமையலறையை அலங்கரிக்கலாம். இந்தத் தட்டுகளையெல்லாம் சேகரித்துச் சமையலைச் சுவரில் ஒட்டிவைக்கலாம். இது சமையலறைக்கு ஒரு புதுமையான வசந்த காலத் தோற்றத்தைக் கொடுக்கும்.