

சமீபத்தில் இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வீடு விற்பனை 2013 முதலாம் அரையாண்டைக் காட்டிலும் சரிவடைந்திருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் அடுத்த ஆறு மாதங்களில் வீடு விற்பனை அதிகரிக்கக்கூடும் என அந்த அறிக்கை கூறுகிறது.
சென்ற 2013 இரண்டாம் அரையாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வீட்டுக் கடன் வட்டி அதிகரிப்பு, பண வீழ்ச்சி போன்ற பல காரணங்களால் ரியல் எஸ்டேட் விற்பனை மிகவும் பின்தங்கியிருந்தது என்று தெரியவ்ந்துள்ளது.
அதைத் தொடர்ந்து இந்த 2014 முதலாம் அரையாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அந்த நிலை மாறும் என நம்பப்படுகிறது. ஆனால் விகிதக் கணக்கின்படி 2014 அரையாண்டில் வீட்டு விலை 37 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது.
2013 முதலாம் அரையாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 45, 300 வீடுகள் விற்கப்பட்டுள்ளது. ஆனால் 2014 முதலாம் அரையாண்டில் அது 28, 500 வீடுகளாகக் குறைந்திருக்கிறது. அதுபோல புதிய வீட்டுத் திட்டங்களும் 43 சதவிகிதம் சரிந்துள்ளது.
ஆனால் புதிய அரசு அமைந்தததைத் தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதால் இந்த நிலை மாறும் என ரியல் எஸ்டேட் துறை நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். மேலும் சமீபத்தில் பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய பொதுத்துறை வங்கிகள் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து வீடுகள் வாங்குவது 2014 அடுத்த அரையாண்டில் இன்னும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரத ஸ்டேட் வங்கி சென்ற வாரம் விடுத்த அறிக்கையில் 75 லட்சத்திற்கு மேல் வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு வீட்டுக் கடன் வட்டியை 10.30 சதவிகிதத்தில் இருந்து 10.10 சதவீதமாகக் குறைத்துள்ளது. பெண் பயனாளர்களுக்கு 10.25 சதவிகிதத்திலிருந்து 10.15 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இவற்றைத் தொடர்ந்து பாரத ஸ்டேட் வங்கிக்கு அடுத்தபடியாக வீட்டுக் கடன் சந்தையில் முன்னணியில் இருக்கும் எச்டிஎஃப்சி வங்கியும் வீட்டுக் கடன் வட்டி சதவீதத்தை, ‘monsoon bonanza’ ‘Winter Bonanza’ போன்ற திட்டங்களின் மூலம் குறைத்துள்ளது.
இதுபோல பஞ்சாப் நேஷனல் வங்கியும் தனது வீட்டுக் கடன் வட்டியைக் குறைத்துள்ளது. ஆனால் பஞ்சாப் நேஷனல் வங்கி 2 கோடிக்கும் அதிகமான வீட்டுக் கடன் தொகைக்கு மட்டுமே இந்தச் சலுகையை வழங்குகிறது. அதாவது 10.50 சதவிகிதத்திலிருந்து 10.25 வரை வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.
ஆனால் இம்மாதிரியான வட்டி விகிதக் குறைப்பு குறைந்த விலை வீடு வாங்குபவர்களுக்கு எந்த நன்மையையும் தரப் போவதில்லை என ரியல் எஸ்டேட் துறை நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.
பெரும் வீட்டுச் சந்தைப் பிரிவுக்கு தேசிய வீட்டு வாரியமும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவும் விதித்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுள்ளன. இது வீடுகள் வாங்குபவர்களுக்குச் சாதகமாக அமையும்.
மேலும் நியூ டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் மலிவு விலை வீட்டுக்கான தொகையை 65 லட்சமாக ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா உயர்த்தியுள்ளது.
இதனால் வீட்டுக்கான கடன் தொகையும் அதிகமாகியிருக்கிறது. அதாவது 65 லட்சம் வீட்டுக்கு 50 லட்சம் வரை வீட்டுக் கடன் கிடைக்கும். இதுவே மெட்ரோ அல்லாத நகரங்களில் மலிவு விலை வீட்டின் மதிப்பு 50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனாளருக்கு 40 லட்சம் வீட்டுக் கடன் கிடைக்கும்.
இதன் மூலம் சென்ற இரண்டாம் அரையாண்டில் ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட தேக்கம் மாறும் என அத்துறை நிபுணர்கள் எதிர் பார்க்கிறார்கள். விற்கப்படாமல் உள்ள வீடுகளும் விற்கப்பட வாய்ப்புள்ளது.