

வீ
ட்டைக் கட்டிப் பார் கல்யாணத்தைப் பண்ணிப்பார் என்று சொல்வார்கள். நீங்கள் வீட்டை விற்க முயன்றதுண்டா? ஒரு சுபயோக சுப தினத்தில் என் மனைவியின் வலியுறுத்தலால் சுமார் 25 வருடங்களுக்கு முன்னால் மிகவும் சிரமப்பட்டு வாங்கிய அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டை விற்க முடிவுசெய்து தரகர்கள் சிலரிடம் கேட்டேன். அவர்கள் சொன்ன சால்ஜாப்புகள் பல. அதனால் நாமே நேரில் களத்தில் குதிக்கலாம் என்று முடிவெடுத்தேன்.
ஒரு சனிக்கிழமையில் பிரபல ஆங்கிலத் தினசரியின் வரி விளம்பரத்தில் இரண்டு வரிக்குள் எல்லாவற்றையும் அடக்கி விளம்பரம் செய்தேன். காலை ஆறுமணியிலிருந்து தொலைபேசி ஒலிக்கக் காத்திருந்தேன். என்னைத் தொடர்புகொள்ளும் புண்ணியவானிடம் எப்படி எனது வீட்டைப் பற்றி சரியானபடி விவரங்களைச் சொல்ல வேண்டும் என்று மனதளவில் ஒரு ஒத்திகை செய்திருந்தேன்.
சுமார் எட்டு மணி அளவில் தொலைபேசி அழைப்பு. ஆவலுடன் எடுத்தேன். “சார் நீங்கள் அந்த பேப்பர்ல கொடுத்த விளம்பரம் பார்த்தேன். எங்க பேப்பர்லயும் குடுக்கிறாங்களா சார்” என்று.
இது போன்று இன்னும் நான்கு விளம்பர முகவரிடமிருந்து அழைப்புகள். மாலையும் மறு நாளும் விதவிதமான விசாரணைகள். “சார் இது ரயில்வே லைன் அருகில் இருக்கு போலிருக்கே. இரவில் ரயில் சத்தத்தில் எப்படி சார் தூங்க முடியும்?” என்றார். அந்த மனிதர் இரவில் ட்ரெயின் பயணமே செய்ய மாட்டார்போல. இவர் கூற்றுபடி பார்த்தால் சென்னையில் பல லட்சம் மக்கள் இரவில் தூங்காமல் உள்ளார்கள் போலும்.
“என்ன சார் இது 25 வருஷப் பழசு போலிருக்கே. விலை வேறு இவ்வளவு சொல்றீங்க. சார் நீங்க ஒவ்வொரு வருஷதுக்கும் சதுர அடிக்கு இப்போதுள்ள விலையைவிட நூறு ரூபாய் குறைக்கணும்” என்றார். எனது மனைவியின் ஆலோசனையின் பேரில் வாக்குவாதங்களைத் தவிர்த்தேன்.
சிலருக்கு அந்தப் பகுதியில் மழைபெய்தால் வெள்ளம் வருமோ என்று கவலை. இன்னும் சிலருக்கு அந்தப் பகுதியில் தண்ணீர் கஷ்டமோ என்று விசாரணை. எனக்குத் தண்ணீர் தேவையான அளவு உண்டு. ஆனால், வெள்ளம் வராது என்று எப்படிப் புரியவைப்பது என்று தெரியவில்லை.
இன்னும் சிலருக்கு வங்கியில் வீட்டுக் கடன் விண்ணப்பிக்க 1947-லிருந்து எல்லாத் தாய்ப் பத்திரங்களின் நகல்களும் தேவை. தமிழ்நாட்டில் 13 வருடம் பார்த்தால் போதும் என்றால், இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று சந்தேகம் வருகிறது. சில வழக்கறிஞர்களும் சில வங்கிகளும் கேட்கும் ஆவணங்களுக்கு அளவே கிடையாது.
சில வங்கிகளில் பட்டா இருக்கிறதா என்று வேறு ஒரு கேள்வி. சென்னை மாநகரம் போன்ற இடங்களில் ஒரு சதவீத அளவுக்குக்கூட அரசு பட்டா வழங்கவில்லையே, என்ன செய்வது? அப்படியே பட்டா வாங்க வேண்டும் என்றால் எவ்வளவு நடையாய் நடந்து எவ்வளவு பேரைக் கவனித்து, நினைக்கும்போதே வடிவேல் சொல்வதுபோல் ‘அப்பவே கண்ணைக் கட்டிவிடும்’.
நான் விளம்பரத்தில் ‘தரகர்கள் தவிர்க்கவும்’ என்று குறிப்பிட்டிருந்தேன். ஒருவர் தொலைபேசியில் அழைத்து தான் தரகர் அல்ல ஒரு மீடியேட்டர்தான் என்றார். எனக்கு தரகருக்கும் மீடியேட்டருக்கும் என்ன வித்தியாசம் என்று புரியவில்லை. அவர், “பரவாயில்ல சார், டீல் முடிந்தால் நீங்கள் எது கொடுத்தாலும் வாங்கிக்கிறேன்” என்றார். அதுவரை பரவாயில்லை.
பலருடன் பேசிப் பேசி, நானும் கடகட என்று எனது வீட்டின் அருமை பெருமைகளை வரிசையாகச் சொல்லும் அளவு ஆற்றல் பெற்றேன். பலமுறை நான் இதுபோல் எனது வீட்டின் பிரதாபங்களைச் சொற்பொழிவு செய்வதைக் கேட்ட என் மனைவி ஒரு நாள் சொன்னார், “நம்ம வீட்டை இப்ப ஒண்ணும் விக்க வேண்டாம்” என்று. எனக்கும் தோன்றியது நாம் ஏன் இவ்வளவு சிறப்பும் வசதியும் உள்ள வீட்டை விற்க வேண்டும்?