பொருள் புதிது 19: இசை கேட்டு குளிக்கலாமா?

பொருள் புதிது 19: இசை கேட்டு குளிக்கலாமா?
Updated on
2 min read

குளியல் மனிதனின் இன்றியமையாத அன்றாட நடவடிக்கைகளில் ஒன்று. காலையில் நம் தூக்கத்தைக் களைத்து, சோம்பலை முறித்து, நமது அன்றாடப் பணிகளை மேற்கொள்வதற்கான புத்துணர்வையையும் உற்சாகத்தையும் இரவில் நம் களைப்பைப் போக்கி நமக்கு நிம்மதியான தூக்கத்தையும் இந்தக் குளியல் நமக்கு வழங்குகிறது.

பழங்கால இந்தியாவில் மூன்றுவேளை குளிக்கும் வழக்கமிருந்திருக்கிறது. இந்த வழக்கம் முதல் நூற்றாண்டில் எகிப்திலும் இரண்டாம் நூற்றாண்டில் கிரீஸிலும் இருந்ததாகப் பல வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் கிரேக்கர்கள் அப்போதே தூவாலைக்குழாயைப் பயன்படுத்தியதாக அந்த ஆய்வுகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. இன்று இந்தத் தூவாலைக்குழாய் இல்லாத குளியலறையே இல்லையெனலாம். குழாயைத் திறந்தவுடன் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை நம்மை நனைத்து வழிந்தோடும் செல்லும் தண்ணீர் நமக்களிக்கும் சுகம் அத்தகையது. இது சுகத்தையளித்தாலும் இதனால் விரயமாகும் தண்ணீர் மிக அதிகம். ஆனால், இன்றைய நவீனத் தொழில்நுட்பம் வழங்கும் ஸ்மார்ட் தூவலைக் குழாய் இந்த விரயத்தைத் தடுக்கிறது.

குழாயின் கீழ் நின்றவுடன் இதமான சூட்டில் நாம் விரும்பும் அழுத்தத்தில் தண்ணீரை ஒளியுடனும் இசையுடனும் சேர்த்து நம் உடலின் மேல் ஒத்தடமளிப்பதுபோல் பீச்சியடிக்கும் கருவிதான் இந்த ஸ்மார்ட் தூவலைக்குழாய். நீர் சூடாவதற்கோ அதிகம் சூடான நீரின் சூடு தணிவதற்கோ நாம் காத்திருக்க வேண்டியது இல்லாமல் இது பார்த்துக்கொள்ளும். மேலும் சோப்பு போடுவதற்கோ கைப்பேசியில் பேசுவதற்கோ நாம் குழாயின் கீழிலிருந்து நகன்றவுடன் உடனடியாகத் தண்ணீர் விழுவதை முற்றிலும் நிறுத்துவதன்மூலம் தண்ணீர் விரயத்தையும் வெகுவாகக் குறைக்கும்.

இது ஒரு ஸ்மார்ட் கருவி என்பதால் வயர்லெஸ் வழியாகவோ புளுடூத் வழியாகவோ இது நம் வீட்டிலிருக்கும் ஸ்மார்ட் ஹப்புடன் இணைந்திருக்கும். இந்தக் கருவியில் உள்ள உணரிகள் நம் முக அமைப்பைக் கொண்டு நம்மையறியும் திறன்கொண்டவை. இதற்கென்று தனிச் செயலி உண்டு. அந்தச் செயலியின் மூலம் நாம் முதலில் நமது தேவைகளையும் விருப்புகளையும் இதனில் நிறுவிக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்குத் தண்ணீரின் வெப்பநிலை, தண்ணீரின் அழுத்தம், உபயோகிக்க விரும்பும் தண்ணீரின் அளவு, ஒளியின் வண்ணம், இசையின் விருப்பத்தேர்வுகள் முதலியவை.

நாம் காலையில் எழுந்துவிட்டதை ஸ்மார்ட் ஹப்மூலம் தெரிந்துகொண்டு தன்னைத் தயார்நிலையில் வைத்துக்கொண்டு நமக்காக இது காத்துக்கொண்டிருக்கும். இதில் உள்ள உணரிகள் நம் முகவமைப்பை உணர்ந்துகொள்ளும் என்பதால், நாம் இந்த உணரியின் உணர்வு வட்டத்தை விட்டு வெளியே வந்தவுடன் அது தண்ணீர் கொட்டுவதை முற்றிலும் நிறுத்திவிடும்.

இது ஐந்துவிதமான அழுத்தங்களில் தண்ணீரைப் பாய்ச்சும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கும். அவை முறையே பூத்தூறல், தண்ணீர் சேமிப்பு, கன மழை, மித மழை மற்றும் மசாஜ் ஆகும். இதனில் வண்ண வண்ண ஒளிகளைப் பாய்ச்சுவதற்கு விளக்குகளும் இசையை ஒலிப்பதற்கு ஸ்பீக்கர்களும் உண்டு. இந்த ஸ்பீக்கர்கள் மூலம் நாம் குளிக்கும்போது கைப்பேசியில் பேசவும் முடியும். இதன் நடுவில் இருக்கும் காட்சித் திரையில் நாம் உபயோகிக்கும் தண்ணீரின் அளவு ஒளிர்ந்துகொண்டிருக்கும். இதன் மூலம் நாம் உபயோகிக்கும் தண்ணீரின் அளவை வரம்பு மீறாமல் பொறுப்புடன் பார்த்துக்கொள்ளலாம்.

தண்ணீர் அழுத்தங்களின் எண்ணிக்கை, இணைப்பின் வகை, ஸ்பீக்கர்களின் தரம், ஒளிகளின் எண்ணிக்கை ஆகியவற்றுக்கு ஏற்ப இதன் விலை நான்காயிரம் ரூபாயிலிருந்து எழுபது ஆயிரம் ரூபாய் வரை மாறுபடுகிறது. H2O வைப் ரெயின் ஷவர் ஹெட், மொயின் யு ஷவர் ஸ்மார்ட், டிரீம் ஸ்பா, வாட்டர் ஹாக் ஸ்மார்ட் ரெயின் ஷவர் ஹெட், கோஹ்லெர் மோக்ஷி ஷவர் ஹெட், பிடெட்4மி மியுசிக் ஷவர் ஹெட், ஹைட்ரோ ஸ்மார்ட் ஷவர், இவா ஸ்மார்ட் ஷவர் போன்றவை சந்தையில் கிடைக்கும் பிரசித்தி பெற்ற தயாரிப்புகள் ஆகும்.

நகரமயமாக்கல் பெருவாரியான ஏரிகளையும் குளங்களையும் விழுங்கிவிட்டது. அதிலிருந்து தப்பிய ஏரிகளையும் குளங்களையும் ஆறுகளையும் முறையாக நாம் பேணுவதில்லை. நகரம் தொடங்கி கிராமம்வரை இன்று நிலத்தடி நீர்தான் நமது தண்ணீர் தேவையைப் பெருவாரியாகப் பூர்த்திசெய்கிறது. இந்த நிலத்தடி நீரையும் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தாமல் அளவுக்கு அதிகமாக உறிஞ்சியெடுப்பதால் அதன் நீர் மட்டமும் அபாயகரமான அளவுக்குக் கீழே சென்று கொண்டிருக்கிறது. மற்றொருபுறம் பெருகும் மக்கட்தொகையும் விரியும் நகரங்களும் வளரும் தொழிற்சாலைகளும் தண்ணீருக்கான நமது தேவையை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்த நிலை தொடர்ந்தால் 2050-ல் தண்ணீரின் தேவை தற்போதைய தேவையைவிட 32 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இன்று கிடைக்கும் தண்ணீரில் வெறும் 22 சதவீதம் மட்டுமே நமது பயன்பாட்டுக்கு 2050-ல் கிடைக்கும் என்ற அதிர்ச்சிகரமான தகவலையும் அந்தக் கணிப்பு நமக்குத் தெரிவிக்கிறது. தேவைக்கும் இருப்புக்கும் இடையேயிருக்கும் இந்த இடைவெளியால் நாம் வருங்காலத்தில் தண்ணீரை இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவோம். இதைத் தவிர்ப்பதற்கு நாம் அனைவரும் தண்ணீரை முறையாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டியது மிக அவசியம்.

அவசியமென்பதைவிட நம் ஒவ்வொருவரின் முன்னிருக்கும் தலையாய கடமையென்று சொல்வதுதான் சரியாக இருக்கும். இந்தச் சிக்கனத்தை அன்றாட வாழ்வில் நமது வீடுகளில் நடைமுறைப்படுத்த வேண்டும். குளியலறைகளில்தான் நம் வீடுகளில் தண்ணீர் அதிகமாக விரயம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட் தூவலைக் குழாய் அந்த விரயத்தைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் நமக்குச் சொகுசான குளியலையும் அளிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in