வில்லங்கச் சான்றிதழ் கூறும் தகவல்கள்

வில்லங்கச் சான்றிதழ் கூறும் தகவல்கள்
Updated on
1 min read

வீ

டு, நிலம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களுள் முக்கியமானது வில்லங்கச் சான்றிதழ் EC (Encumbrance Certificate) வாங்குவது. நாம் வாங்கும் சொத்தில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்பதை இந்த வில்லங்கச் சான்றிதழ் காட்டிக்கொடுத்துவிடும்.

சர்வே எண், விற்பவரும் வாங்குபவரும் செய்துகொண்ட ஒப்பந்தம், செய்துகொண்ட தேதி, பதிவுசெய்யப்பட்ட தேதி, பதிவுத் தன்மை அதாவது Sale Deed, Mortgage Deed, Agreement போன்ற விவரம், சொத்தின் மதிப்பு, சொத்தை எழுதிக்கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் பெயர், பதிவுசெய்யப்பட்ட ஆண்டு மற்றும் பதிவு எண். அந்தச் சொத்தை அடமானம் வைத்து ஏதேனும் கடன் வாங்கப்பட்டிருந்தாலும் அதுவும் தெரிந்துவிடும். சொத்தின் பேரில் பவர் ஆஃப் அட்டானி எழுதிக் கொடுத்திருந்தாலும் வில்லங்கச் சான்றிதழ் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.

ஆனால், 2009ஆம் ஆண்டு நவம்பரில்தான் பவர் ஆஃப் அட்டர்னியைப் பதிவுசெய்யும் முறை அறிமுகமாகியது. அதனால் அதற்கு முன்பு சொத்தின் உரிமையாளர் பவர் ஆஃப் அட்டர்னி என்று யாரையாவது நியமித்திருந்தால் வில்லங்கச் சான்றிதழில் வராது. அதுபோல சொத்து பதிவுசெய்யப்படாத அடமானப் பத்திரத்தில் இருந்தால் அதையும் கண்டுபிடிக்க முடியாது.

பவர் ஆஃப் அட்டர்னி என்பது சொத்தின் உரிமையாளர், சொத்தை விற்கும் உரிமையை ஒருவருக்கு அளிக்கும் ஒப்பப் பத்திரம் எனலாம். இந்த பவர் ஆஃப் அட்டர்னியை வைத்துதான் பல முறைகேடுகள் நடைபெறுகின்றன. உதாரணமாக, சொத்தின் உரிமையாளர், 2009-ம் ஆண்டுக்கு முன்பு ஒருவருக்கு பவர் ஆஃப் அட்டர்னியை எழுதிக் கொடுத்தார் என வைத்துக்கொள்வோம். அதை ஓர் ஆண்டிலேயே பவர் ஆஃப் அட்டர்னியைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறார். ஆனால், இந்தப் பழைய பவர் ஆஃப் அட்டர்னி பத்திரத்தை வைத்து அந்த நபர் அந்தச் சொத்தை ஏமாற்றி விற்கும் வாய்ப்புள்ளது. 2009 நவம்பரில்தான் பவர் ஆஃப் அட்டர்னி பதிவுசெய்யும் முறை வந்தது என்பதால் உங்களால் அதைக் கண்டுபிடிக்க முடியாது. அதனால் வெறும் பவர் ஆஃப் அட்டர்னியை மட்டும் நம்பி இடத்தை வாங்கிவிடக் கூடாது.

நீங்கள் வாங்கும் சொத்து பதிவுசெய்யப்பட்டிருக்கும் பதிவாளார் அலுவலகத்தில் வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இணைய தளத்தின் மூலமும் வில்லங்கச் சான்றிதழ் பெற முடியும். இணையத்தின் www.tnreginet.net என்ற தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆனால், இந்த வசதி குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. இந்தச் சேவை எந்தெந்த ஊர்களுக்கு இருக்கிறது என்ற விவரமும் அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். 30 ஆண்டுகளுக்கு உட்பட்ட சொத்துகள் மட்டும்தான் கணினியில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதனால் அதற்கு முன்பு உள்ள சொத்துகளுக்கு வில்லங்கச் சான்றிதழ் பெறக் கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்காக வில்லங்கச் சான்றிதழ் இல்லாமல் சொத்துகளை வாங்குவது ஆபத்தில் போய் முடியலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in