

ஆண்டுக்கு ஆண்டு நகரங்களின் மக்கள் தொகை அதிகரித்துவருகிறது. அதைப் போல் நகரங்களில் வீடற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றிலும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. நகரத்தின் வீட்டுத் தேவையை நிறைவேற்றுவது பெரும் சவாலான காரியமாக இருக்கிறது.
நகரத்தை நம்பி இருப்பவர்களுக்கு வீடு ஏற்படுத்தித் தருவதற்காக அவர்களை நகருக்கு வெளியே அப்புறப்படுத்துவதும் முறையான செயல் அல்ல. அவர்கள் தங்கள் அன்றாடப்பாட்டுக்கு நகரத்தையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. அதனால் நகரத்துக்குள்ளேயே அவர்களுக்கு வீடு அமைத்துத் தர வேண்டும்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரமும் இத்தகைய பிரச்சினையைச் சந்தித்து வருகிறது. இதை எதிர்கொள்ள நியூயார்க் மாநகரத் தலைவர் பில் டெ பிளேசியோ சில் புதுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஃபிரேம்லேப் என்னும் நிறுவனம் இதற்கான ஆலோசனையை வழங்கியுள்ளது. நகரத்தின் பிரம்மாண்டமான கட்டிடங்களின் வெளிப்புறச் சுவர்கள் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.
அந்தச் சுவரில் தேன் கூட்டைப் போல சிறு சிறு வீடுகளை உருவாக்கினர். தேன் கூட்டின் அறைகளைப் போல் சிறு வீடுகள் இவை. இந்த வீடுகள் முழுவதும் 3 டி தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டவை. இந்த வீட்டின் வெளிப்புறச் சுவர் இரும்பையும் ஆக்ஸைடு புகுத்தப்பட்ட அலுமினியத்தையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
பாலிகார்பனைட்டும் மரமும் கொண்டு அதன் உட்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகள் அமைக்கத் தனியான இடம் தேவை இல்லை. ஏற்கெனவே இருக்கும் கட்டிடங்களின் வெளிப்புறச் சுவர்களில் இந்த வீடுகளைப் பொருத்த முடியும்.