

சமீபத்தில் வெளியாகியுள்ள மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், வீட்டுக் கடன் வாங்கிய, வாங்க இருக்கும் அனைவருக்கும் இது மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று உள்ளது. இதுவரை வீட்டுக் கடன் பெற்றவர்கள் திருப்பிச் செலுத்தும் வட்டிக்கான வரிச் சலுகைக்கான உச்ச வரம்பு ரூ. 1.5 லட்சமாக இருந்தது. இதை இன்றைய பட்ஜெட்டில் ரூ. 2 லட்சமாக உயர்த்தியுள்ளார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி.
உச்ச வரம்பை அதிகரித்ததன் மூலம் வீட்டுக் கடன் வாங்கியோருக்கு ஆண்டுக்கு ரூ. 50,000 வரை சேமிப்பு கிடைக்கும். உதாரணமாக ரூ. 20 லட்சம் வீட்டுக் கடன் வாங்கியிருப்பவர்கள், இதற்கு முன்பு வரை மாதம் சுமார் ரூ. 22,000 திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். இதில் அசல் வெறும் ரூ. 3 ஆயிரம்தான் இருக்கும். வட்டி மட்டுமே ரூ. 19 ஆயிரம் வரை இருக்கும்.
ஆக ஓர் ஆண்டுக்கு வட்டியாக மட்டும் ரூ. 2.28 லட்சம் செலுத்த வேண்டியிருக்கும். இதில் இதுவரை ரூ. 1.5 லட்சத்துக்கு மட்டுமே வரி விலக்கு கிடைத்திருக்கும். மிச்சமுள்ள ரூ. 78,000க்கு வரி செலுத்தி வந்திருப்பீர்கள். இனிமேல் ரூ. 2 லட்சத்துக்கு வரி விலக்கு கிடைக்கும். இதனால் ரூ. 28,000 மட்டுமே வரி செலுத்த வேண்டி வரும். இது வீட்டுக் கடன் வாங்கியோருக்குப் பெரிய உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீடு வாங்குவது, கட்டுவது தொடர்பாக உங்களுக்குப் பல விதமான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். அதிலுள்ள சிரமங்களையும் சுவாரசியங்களையும் எங்களுக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி:
sonthaveedu@thehindutamil.co.in
கடிதத் தொடர்புக்கு:
சொந்த வீடு, தி இந்து
கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை- 600 002.