

ச
மையலறையில் வெளியேறும் எண்ணெய் கலந்த புகை, நம் உடல் நலனுக்கு மிகுந்த தீங்கு விளைவிக்கக்கூடியது. அதனால்தான் பழங்காலத்து வீடுகளின் சமையலறையில் புகையை வெளியேற்றுவதற்கு முறையான வசதி செய்யப்பட்டிருக்கும். ஆனால், இடப்பற்றாக்குறை காரணமாக இன்றைய வீடுகளில் அந்த வசதி இருப்பதில்லை. இன்றைய வீடுகள் புகையை வெளியேற்றும் மின்விசிறியை மட்டும்தான் நம்பியுள்ளன. ஆனால், அதன் செயற்திறன் இந்தப் புகையை வெளியேற்றுமளவுக்கு இருப்பதில்லை. ஸ்மார்ட் புகைபோக்கி இந்தக் குறையைக் களைந்து புகையில்லாச் சமையலறையை நமக்கு அளிக்கிறது.
சமைக்கும்போது சமையலறையைச் சூழும் எண்ணெய் கலந்த புகையை இந்தப் புகைபோக்கி உறிஞ்சி சமையலறையில் எண்ணெய்ப் பிசுக்கு படியாமல் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும். அது மட்டுமின்றிப் புகையுடன் சேர்த்து சமையல் வாசனையையும் உறிஞ்சிக்கொள்ளும் திறன் அதற்கு உண்டு. இதனால் உணவுப் பழக்கம் காரணமாக வாடகைக்கு வீடு மறுக்கப்படும் காலம் இனி இல்லாமல் போக வாய்ப்புகள் இருக்கின்றன. இதை எப்படித் தேர்வுசெய்வது, எங்கு வாங்குவது?
முதலில் இந்தப் புகைபோக்கியின் அளவு நம் சமையலறையில் பொருத்தக்கூடிய வகையில் உள்ளதா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். அடுத்ததாகப் புகையை உறிஞ்சும் அதன் திறன் நம் சமையலறையின் அளவுக்குப் போதுமானதா என்பதைச் சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பின் நாம் சமைக்கும் உணவின் தன்மைக்கு ஏற்ற வடிகட்டியைத் (Filter) தேர்வுசெய்ய வேண்டும்.
வடிவமைப்பு, உற்பத்திப் பொருள், செயல்முறை ஆகியவற்றைப் பொறுத்து வடிகட்டியை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை முறையே கேசட் வடிகட்டி (Cassette filter), பேஃபல் வடிகட்டி (Baffle Filter), கார்பன் வடிகட்டி (Carbon filter).
கேசட் வடிகட்டி ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட அலுமினிய வலையால் தயாரிக்கப்பட்டிருக்கும். அந்த வலையிலிருக்கும் சிறு துளைகளின் வழியாகப் புகை வெளியேறிவிடும். எண்ணெய்ப் பிசுபிசுப்பானது அந்த வலையிலேயே படிந்துவிடும். இந்த எண்ணெய்ப் பிசுபிசுப்பு ஒரு வாரத்துக்குள் அந்த வலையில் இருக்கும் துளைகளை முழுவதுமாக அடைத்துவிடும்.
எனவே, வாரம் ஒருமுறை இந்த வடிகட்டியைக் கழற்றிச் சுத்தம்செய்ய வேண்டியது மிக அவசியம். இதைச் சுத்தம் செய்வது சுலபமான ஒன்றுதான். ஒரு வாளிச் சுடு நீரில் சோப்புத் தூளைக் கலக்க வேண்டும். பின் அந்தக் கரைசலில் இந்த வடிகட்டியை இருபது நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பின்பு அதனை வெளியே எடுத்துச் சுத்தமான தண்ணீரில் அலசினால் வடிகட்டி மீண்டும் புதிது போலாகிவிடும்.
பேஃபல் வடிகட்டி ஒன்றுக்கு மேற்பட்ட வளைவான தகடுகளால் செய்யப்பட்டிருக்கும். புகைபோக்கி வெளியேற்றும் புகையின் திசைக்கு ஏற்றவண்ணம் இந்தத் தகடுகள் தன் திசையை மாற்றி அந்தப் புகையை வெளியேற்றும். புகையோடு கலந்திருக்கும் எண்ணெய்யானது தகட்டில் படிந்து வடிந்து கீழே வந்து விடும். இதனால் புகை வெளியேறும் பாதையில் அடைப்பு எதுவும் ஏற்படாது. இந்த வகை வடிகட்டியைப் பராமரிப்பது மிக எளிது. மூன்று மாதத்துக்கு ஒருமுறை இதைச் சுத்தம் செய்தால் போதும். நம் நாட்டு உணவு வகைகளுக்கு மிகவும் ஏற்ற வடிகட்டி இதுதான்.
கார்பன் வடிகட்டி கரித்துண்டுகளால் தயாரிக்கப்பட்டது. சமையலறையில் சுழலும் வாசனையை உறிஞ்சிக்கொள்வதுதான் இதன் முக்கியப் பணி. இது அவசியமானது எனச் சொல்ல முடியாது. வாசனையையும் அகற்ற வேண்டும் என்று விரும்பினால் மட்டும் இதை கேசட் வடிகட்டியுடனோ பேஃபல் வடிகட்டியுடனோ சேர்த்துப் பயன்படுத்தலாம். இந்த கார்பன் வடிகட்டியை ஆறு மாதத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
எங்கே பொருத்தப் போகிறோம், எப்படிப் பொருத்தப் போகிறோம் என்பதைப் பொறுத்துப் புகைபோக்கியை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை முறையே, சுவரில் பொருத்தப்படும் புகைபோக்கி (Wall mounted chimney), மேலிருந்து தொங்கவிடப்படும் புகைபோக்கி (Island chimney), வீட்டோடு சேர்த்து அமைக்கப்பட்ட புகைபோக்கி (Built-in chimney), மூலையில் பொருத்தப்படும் புகைபோக்கி (Corner chimney) ஆகும்.
பெயருக்கு ஏற்றபடி இது தனது பாகங்களைத் தானே சுத்தம் செய்து கொள்ளும். இது தன்னகத்தே அதிக விசையுடன் புகையை வெளியேற்றும் சுழலியைக் கொண்டிருக்கும். இதனால் புகையானது மிகுந்த விசையுடன் வேகமாக வெளியேறும்போது அதிலிருக்கும் எண்ணெய் மட்டும் வடிகட்டியின் சுவரில் மோதி வடிந்து கீழே இருக்கும் எண்ணெய் சேகரிக்கும் கொள்கலனை அடையும். இந்தக் கொள்கலனை மாதத்துக்கு ஒரு முறை கழற்றிச் சுத்தம் செய்ய வேண்டும். இருப்பினும், சிறிதளவு எண்ணெய்ப் பிசுபிசுப்பு அதிலிருக்கும் பேஃபல் வடிகட்டியில் ஒட்டிக்கொண்டிருக்கும். எனவே, அந்த பேஃபல் வடிகட்டியை ஆறு மாதத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்து கொள்வது நல்லது. இதைப் பராமரிப்பது மிகவும் எளிதானது என்பதால் இளம் இல்லத்தரசிகளின் விருப்பத் தேர்வாக இது உள்ளது.
புகையை வெளியேற்றும் குழாய் இல்லாத புகைபோக்கி இப்போது சந்தையில் கிடைக்கிறது. இது புகையிலிருந்து வாசனையும் எண்ணெய்ப் பிசுபிசுப்பையும் அகற்றி, புகையைச் சுத்தமான காற்றாக மாற்றி மீண்டும் சமையலறைக்கே திருப்பி அனுப்பிவைக்கும். ஆனால், இந்த வகைப் புகைபோக்கி புகையின் வெப்பத்தை அகற்றுவதில்லை. எனவே, சமையலறை வெப்பம் நிறைந்ததாகவே இருக்கும். மேலும், இந்த வகை புகைபோக்கியின் விலையும் அதிகம். குழாயுள்ள புகைபோக்கியானது புகையை வெளியே அனுப்பிவிடுவதால் சமையலறையின் வெப்பம் வெகுவாகக் குறைந்துவிடும். இதன் விலையும் குறைவு என்பதால் இதுவே புத்திசாலித்தனமான தேர்வாக இருக்கும். இருப்பினும், அழகியலைக் கருத்தில் கொண்டு சிலர் குழாயில்லாப் புகைபோக்கியைத் தேர்வு செய்கின்றனர்.
புகைபோக்கியின் கீழ்ப் பகுதியின் வடிவளவானது உங்கள் அடுப்பின் அளவுக்கு இணையானதாகவோ அதைவிட அதிகமாகவோ இருக்க வேண்டும். ஆனால் ஒருபோதும் அடுப்பின் எரிவட்டின் அளவுக்குக் குறைவானதாக இருக்கக் கூடாது.
சமையலறை சிறியதாக இருக்குமேயானால் 500 முதல் 650m3/hr உறிஞ்சும் ஆற்றல் போதுமானது. சமையலறை பெரிதாக இருந்தால் 1000m3/hr உறிஞ்சும் ஆற்றல் தேவைப்படும். இந்த உறிஞ்சும் ஆற்றலைக் கணக்கிடுவது மிகவும் எளிது. சமையலறையில் இருக்கும் காற்றை ஒரு மணி நேரத்துக்குப் பத்து முறை முழுவதுமாக வெளியேற்றும் திறன் இருக்கும்படி உறிஞ்சும் ஆற்றலை நாம் கணக்கிட வேண்டும். உதாரணத்துக்கு அறையின் கன அளவு = அகலம் x நீளம் x உயரம் = 4 x 4 x 2.5 = 40 m3என்று எடுத்துக்கொள்வோம். இந்த அறைக்குத் தேவைப்படும் உறிஞ்சும் ஆற்றல் = 40 m3 x 10 = 400 m3/hr ஆகும்.
தயாரிப்பு நிறுவனம், வடிகட்டியின் வகை, புகைபோக்கியின் அமைப்பு, உறிஞ்சும் ஆற்றல் ஆகியவற்றைப் பொறுத்து இதன் விலை மாறுபடுகிறது. இதன் குறைந்த பட்ச விலை ரூபாய் 4,000 ஆகும். குட்சினா, ஹிண்ட்வேர், சன்ஃபிளேம், எலைகா, ஃபேபர், IFB, கிளன், பிஜியான், காஃப், பிரஸ்டிஜ், பிரைட் ஃபிளேம் போன்ற பல நிறுவனங்களின் தயாரிப்புகள் சந்தையில் கிடைக்கின்றன. புகைபோக்கியை வீட்டில் நிறுவுவதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால், எல்லா நிறுவனங்களும் அதனை இலவசமாக நம் வீடுகளில் நிறுவித் தருகின்றன.
உணவின் ருசியில் கவனம் செலுத்தும் இல்லத்தரசிகள் அந்தப் புகையால் ஏற்படும் கண் எரிச்சலையோ தொண்டைக் கமறலையோ, உடல் நலக்கேடையோ பெரும்பாலும் சட்டை செய்வதில்லை. இருப்பினும், அந்தப் புகையால் அடுப்பு மேட்டிலும் சமையலறைச் சுவரிலும் ஜன்னல் கம்பிகளிலும் மின் விளக்கின் மீதும் படியும் எண்ணெய்ப் பிசுபிசுப்பு அவர்களுக்கு எப்போதும் பெரும் தலைவலி ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. அவர்களின் இந்தத் தலைவலியைப் போக்கவும், உடல்நலனைக் காக்கவும் கிடைத்த வரப்பிரசாதம்தான் இந்த ஸ்மார்ட் புகைபோக்கி.