

தூ
க்கம் நம் வாழ்வின் மிக முக்கிய அம்சம். நாம் அனைவரும் வாழ்வின் மூன்றில் ஒரு பகுதியை அதற்குத்தான் செலவிடுகிறோம். கடின உழைப்புக்குப் பின்னான இரவில் களைப்புடன் படுக்கையில் சாய்வதைவிட வேறு சுகம் இருக்க முடியாது. ஆனால், உண்மையான சுகம் அதற்குப் பின்னான நல்ல தூக்கத்தில்தான் உள்ளது. ஏனென்றால், நல்ல தூக்கம் அடுத்த நாள் உழைப்புக்கு மட்டுமல்ல; நம் ஆரோக்கியத்துக்கும் மிக அவசியம்.
இன்றைய நவீனத் தொழில்நுட்பம் ஸ்மார்ட் கருவிகளை வழங்கி நம்மைத் தூங்க வைக்க முயல்கிறது. நிலவைப் போன்று குளுமையான ஒளியை ஸ்மார்ட் விளக்குகள் பரவச் செய்கின்றன, தாலாட்டும் இசையை ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் காதுகளில் ஒலிக்கச் செய்கின்றன, நம் உடலுக்கு இதமாக அறையின் வெப்பநிலையை ஸ்மார்ட் வெப்பநிலைச் சீராக்கி பேணுகிறது. இந்த வரிசையில் நாம் தூங்கும் மெத்தையும் இன்று இணைந்துவிட்டது. இதுவரை பல வகையான மெத்தைகள் நமக்குச் சொகுசளித்தன. ஆனால், இந்த ஸ்மார்ட் மெத்தை இவற்றைவிட மேலானது.
இந்த மெத்தை ஒரு ஸ்மார்ட் கருவி. இது பல வகையான ஃபோம்களைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இது தன்னுள் பல உணரிகளையும் (Sensor) மைக்ரோ ஃபோனையும் கொண்டுள்ளது. இதற்குத் தன்னைத் தானே சூடுபடுத்திக்கொள்ளும் திறன் உண்டு. ஸ்மார்ட் சாதனம் என்பதால் இதற்கென்று தனிச் செயலி உண்டு. வீட்டில் உள்ள மற்ற ஸ்மார்ட் சாதனங்களுடன் இதை இணைத்துக்கொள்ள முடியும். ஸ்மார்ட் ஹப்புடன் இணைக்கப்பட்டால் IFTTT வசதியை இதனால் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
நாம் படுக்கையில் படுத்தவுடன் ஒளியின் அளவை இது மாற்றியமைக்கும். நாம் தூங்குவதற்கு ஏற்ற இசையை உறுத்தாத அளவில் ஒலிக்கச் செய்யும். நம் படுக்கையறை வெப்பநிலை நம் உடல்வாகுக்கு ஏதுவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளும். நம் உடம்புக்குத் தேவையான கதகதப்பை அதன் சூடுபடுத்தும் திறன் நமக்கு அளிக்கும். நாம் முழுமையாகத் தூங்கிவிட்டதை அதனுள் உள்ள உணரிகள்மூலம் உணர்ந்துகொள்ளும் திறன் அதற்கு உண்டு. எனவே, நாம் தூங்கியதை உணர்ந்தபின் அது ஒலியை முற்றிலும் நிறுத்திவிடும். அறை ஓளியின் அளவை மிகவும் மங்கலாக்கிவிடும். அறையைத் தொடர்ந்து கண்காணித்து அதன் வெப்பநிலையையும் மெத்தையின் கதகதப்பையும் நமக்கு ஏதுவாக இருக்குமாறு மாற்றியமைத்துக்கொண்டேயிருக்கும். முக்கியமாக நாம் ஆழ்ந்து தூங்கிய நேரத்தின் அளவு, இதயத்துடிப்பின் அளவு, குறட்டையின் அளவு போன்ற தகவல்களைச் சேகரித்து நமக்கு இது அளிக்கும்.
இதன் செயலியின் மூலம் நமக்கு வேண்டிய விதத்தில் முதலில் இதைக் கட்டமைத்துக் கொள்ள வேண்டும். பின், இதை ஸ்மார்ட் ஹப்புடன் இணைக்க வேண்டும். இதன் மூலம் தன்னை மற்ற ஸ்மார்ட் கருவிகளுடன் இது இணைத்துக்கொள்கிறது. பின், இது ஸ்மார்ட் ஹப்பில் உள்ள IFTTT வசதியைப் பயன்படுத்தி நாம் வடிவமைத்தபடி அவற்றை இயங்கவைக்கும்.
உதாரணத்துக்கு நாம் படுக்கையில் படுப்பதாக வைத்துக் கொள்வோம். உடனே இது ஸ்மார்ட் ஹப் வழியாக ஸ்மார்ட் விளக்கின் அளவைச் சற்று மங்கலாக்கும். பின், நம் வீட்டில் உள்ள கூகுள் ஹோமையோ அமேசான் எக்கோவையோ அது தொடர்பு கொள்ளும். நாம் ஏற்கெனவே தேர்வு செய்து கொடுத்திருக்கும் இசையைத் தகுந்த ஒலியளவில் அதன் மூலம் ஒலிக்கச் செய்யும். பின்னர், ஸ்மார்ட் வெப்பநிலை சீராக்கியைக் தொடர்புகொண்டு அறையின் வெப்பநிலை நமக்கு ஏற்ற வண்ணம் மாற்றியமைக்கும். பின் நம் நம் உடல் சூட்டை அதனுள் உள்ள உணரிகள்மூலம் உணர்ந்து நமக்கு வேண்டிய கதகதப்பை அந்த மெத்தை இரவு முழுவதும் அளித்துக் கொண்டேயிருக்கும்.
காலையில் நாம் விரும்பும் நேரத்தில் அலாரம் அடித்து நம்மை எழுப்பிவிடும். நாம் விழித்ததை உணர்ந்தபின் மீண்டும் ஸ்மார்ட் ஹப் வழியாக ஸ்மார்ட் விளக்கின் ஒளி அளவை நன்கு பரவச் செய்யும். ஸ்மார்ட் ஸ்பீக்கரின் மூலம் வேண்டிய இசையைத் தகுந்த அளவில் ஒலிக்கச் செய்யும். வீட்டில் ஸ்மார்ட் காபி மேக்கர் இருந்தால் அதனை இயங்கவைக்கும். அதனூடே குளியறையில் வெந்நீர்க்கொதிகலனை (Geyser) இயக்கித் தண்ணீரையும் சூடுச் செய்ய ஆரம்பிக்கும்.
தன்னுள் இருக்கும் உணரிகள்மூலம் நம்மைப் பற்றித் தகவல்களை இது சேகரித்துக் கொண்டேயிருக்கும். அந்தத் தகவல்கள்மூலம் அது தனது செயற்கை அறிவை வளர்த்துத் தன் செயல்பாட்டைச் சிறப்பாக்கிக் கொள்ளும். உதாரணத்துக்குத் தூங்கும்போது உங்கள் துணைவியோ குழந்தையோ உங்களிடமிருந்து போர்வையை அதிகப்படியாக உருவிக் கொள்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்தச் சமயத்தில் குளிரைச் சமாளிக்க முடியாமல் எழுந்து ஏசி ரிமோட்டை தேடவோ மின்விசிறியைக் குறைத்து வைக்கவோ முயல்வோம். இந்தச் சூழ்நிலை நம்மில் பலருக்கு அன்றாடம் ஏற்படும் நிகழ்வு.
இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க நமக்குக் கைகொடுக்கும் தோழன் இந்த ஸ்மார்ட் மெத்தை. இரவில் நம் நடவடிக்கைகளை உணர்வதன் மூலம் தன் கதகதப்புத் தன்மையை வலப்புறமும் இடப்புறமும் வெவ்வேறாக இருக்குமாறு தன் செயல்பாட்டை மாற்றியமைத்துக்கொள்ளும். மேலும்,குழந்தைகள் மெத்தையை ஈரமாக்கினால் நமக்கு இது ஒலி எழுப்பித் தெரியப்படுத்தும். முக்கியமாகப் பக்கத்து அறையில் தூங்கும் முதியவர்களின் இதயத் துடிப்பில் ஏதேனும் அபாயகரமான மாற்றத்தை உணர்ந்தால் இது நம்மை உடனே எச்சரிக்கும்.
இது நம்மிடமிருந்து சேகரிக்கும் தகவல்கள் நமக்கு மிகவும் பயனுள்ளவை. நாம் எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதைத் தெரிந்துகொள்வது நம் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும். இதயத் துடிப்பைப் பற்றிய தகவல் நம் உடல்நலத்தைப் பேண உதவும். குறட்டை ஒலியின் அளவு பற்றிய தகவல் பிறருக்கு நாம் எந்தளவு தொந்தரவு கொடுக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள உதவும்.
தயாரிப்பு நிறுவனம், மெத்தையின் அளவு, மெத்தையின் தடிமன், ஃபோமின் தரம், ஃபோமின் வகை, செயலியின் தரம், உணரிகளின் எண்ணிக்கை, சூடுபடுத்திக்கொள்ளும் திறன், தகவல்களைப் பதிவுசெய்யும் திறன் ஆகியவற்றைப் பொறுத்து இதன் விலை மாறுபடுகிறது. குறைந்தபட்ச விலை சுமார் மூன்று லட்சம் ரூபாய் . எயிட் ஸ்மார்ட் பெட், ஸ்லீப் நம்பர் 360ஸ்மார்ட் பெட், ரெஸ்ட் ஸ்மார்ட் பெட், நோர்டியாக் டிராக் ஸ்லீப், லூனா ஸ்மார்ட் பெட், கிங்க்ஸ் டௌன் ஸ்லீப் ஸ்மார்ட், பல்லுகா ஸ்மார்ட் பெட், ஆகியவை சந்தையில் மிகப் பிரசித்தி பெற்றவை. அமேசான், ஈபே, அலிபாபா போன்ற இணையச் சந்தைகளில் இவற்றை வாங்கிக்கொள்ளலாம்.
குழந்தைகள் அன்னையின் மடியில் படுத்தவுடன் நிம்மதியாகத் தூங்கிவிடுவார்கள். அந்த மடியின் கதகதப்பிலும், தொடைகளின் சீரான ஆட்டத்திலும், மெல்லிய தாலாட்டிலும் தன்னை மறந்து தூங்கியவர்கள் நாம். பெரியவர்களாக வளர்ந்த பின்னும் அந்தக் கதகதப்பின் ஏக்கம் நம்மை விட்டு அகல்வதில்லை. தொழில்நுட்பங்கள் அந்த ஏக்கத்தைக் களைய முயன்று இதுவரை தோற்றுக்கொண்டிருந்தது. ஆனால், இன்றைய நவீன தொழில்நுட்பம் நம் ஏக்கத்தைப் பெருமளவு களைந்துவிட்டது என்று தான் சொல்லலாம், ஆம், பாசம் என்ற ஒன்றைக் கணக்கில் கொள்ளாவிட்டால் இந்த ஸ்மார்ட் மெத்தையை நம் அன்னை மடியின் நீட்சியாகப் பார்க்கலாம்.