கிறிஸ்துமஸ் அலங்காரங்கள்

கிறிஸ்துமஸ் அலங்காரங்கள்
Updated on
2 min read

கி

றிஸ்துமஸ் கொண்டாட்டங்களையும், வீட்டு அலங்காரத்தையும் தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. கடைகளில் கிடைக்கும் அலங்காரப் பொருட்களை வைத்து மட்டும் அலங்கரிக்காமல் நாமும் சில பொருட்களைச் செய்து வீட்டை அலங்கரிக்கலாம். இந்தப் பொருட்களைச் செய்யும்போது வீட்டில் உள்ள அனைவரையும் இணைத்துக்கொண்டால், கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைக்கட்டத் தொடங்கிவிடும். விடுமுறை என்பதால் குழந்தைகளையும் வீட்டை அலங்கரிப்பதில் ஈடுபடுத்தலாம். கிறிஸ்துமஸ் விழாவுக்கு வீட்டை அலங்கரிப்பதற்கான சில வழிகள்:

கடைகளில் கிடைக்கும் வண்ண வண்ண சாட்டின் ரிப்பன்களை வாங்கி அதில் அலங்காரப் பந்துகளையும், மணிகளையும் இணைத்து ஜன்னலில் தொங்கவிடலாம். ரிப்பன்களைத் தொடர்பின்றி எல்லா நிறங்களிலும் பயன்படுத்தலாம். அப்படியில்லையென்றால், குறிப்பாக ஏதாவது தீம்களில் இரண்டு வண்ணங்களிலும் பயன்படுத்தலாம். சிவப்பு, வெள்ளை ரிப்பன்களில் கோல்டன் அல்லது சில்வர் பந்துகளைக் கட்டித்தொங்கவிடலாம். இது வீட்டுக்கு உடனடியாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான தோற்றத்தைக் கொடுத்துவிடும்.

கிறிஸ்துமஸ் மரம் வைப்பதற்கு வீட்டில் இடப் பற்றாக்குறை பிரச்சினை இருந்தால், ஒரு சிறிய மேசை மீதே அழகான கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்க முடியும். மேசை கிறிஸ்துமஸ் மரத்தைவிடவும் எளிமையான வழியும் இருக்கிறது. கிறிஸ்துமஸ் மரத்தின் கிளைகளைக் கண்ணாடிக் குடுவையில் போட்டு வரிசையாக ஜன்னல் ஓரங்களில் வைக்கலாம். இதனால் கிறிஸ்து மரம் வைக்க இடத்தைத் தனியாகத் தேட வேண்டியதில்லை. கொஞ்சம் பெரிய குடுவையில் கிளைகளை அதிகமாக வைத்தால் அதிலேயே அலங்காரப் பந்துகள், பனி மனிதன், நட்சத்திரங்கள் ஆகியவற்றை வைத்து அலங்கரிக்கவும் செய்யலாம்.

டைனிங் டேபிளை அலங்கரிக்க கண்ணாடிக் குடுவைகளைப் பயன்படுத்துவது எளிமையான வழி. கண்ணாடி டம்ளர்களில் ஆங்காங்கே சிறிய கோல்டன் அலங்கார மணிகள், பந்துகள், நட்சத்திரங்களைப் போட்டு வைக்கலாம். இது சாப்பாட்டு மேசைக்கு அழகான தோற்றத்தைக் கொடுக்கும். அத்துடன் மேசையின் ஓரங்களில் சாட்டின் ரிப்பன் மணிகளையும் தொங்கவிடலாம்.

வாசலில் இரண்டு சாதாரணப் பூந்தொட்டிகளில் அலங்காரப் பந்துகளை வைத்து செடி போன்ற தோற்றத்தை உருவாக்கலாம். இந்த இரண்டு தொட்டிகளையும் கதவுக்கு வெளியே வைத்தால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை வரவேற்பதற்கு ஏற்றதாக இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in