

இ
ரண்டாம் கட்ட மெட்ரோ ரயிலின் ஒரு பகுதி, அடுக்குச் சாலையின் மீது தரமணியிலிருந்து சிறுசேரி வரை 17.2 கிலோமீட்டர் நீளத்துக்கு அமைக்கப்படவிருக்கிறது.
பழைய மகாபலிபுரம் சாலை, ‘ஐடி எக்ஸ்பிரஸ்வே’யாக, 2000-களின் தொடக்கத்தில் மாறிய பிறகு, சென்னை நகரம் தன்னை மெட்ரோ நகரமாகப் புதுப்பித்துகொண்டிருக்கிறது.
ஏற்கெனவே நெரிசலாக இருக்கும் ஆறு-வழி ‘ஐடி எக்ஸ்பிரஸ்வே’ இப்போது எதிர்காலத்துக்கான சாலையாக மாறவிருக்கிறது. இந்தத் திட்டம் நிறைவேறினால், நான்கு வழி அடுக்குச் சாலையின் மேல் மெட்ரோ ரயிலின் உயர்தடம் அமைக்கப்படும். தரமணியிலிருந்து சிறுசேரிவரையிலான 17 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்தத் தடம் ‘எக்ஸ்பிரஸ்வே’-யில் அமைக்கப்படும்.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL), தமிழ்நாடு சாலை வளர்ச்சி நிறுவனம் (TNRDC) என்ற இரண்டு நிறுவனங்களுக்கிடையிலான புரிந்துணர்வுக்குப் பிறகு இந்த உள்கட்டமைப்புத் திட்டம் உருவாகியிருக்கிறது.
இந்த அடுக்குச் சாலையின் முதல் கட்டம், ‘எஸ்.ஆர்.பி. டூல்ஸ்’ சந்திப்பிலிருந்து சிறுசேரிவரை, 5.5 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகிறது. இந்தச் சாலையில் மேலடுக்கில் 4.5 மீட்டர் உயரத்தில் மெட்ரோ ரயில் தடம் அமையவிருக்கிறது. சுங்க வசதியுடன் 2008-ம் ஆண்டு டிசம்பரிலிருந்து செயல்படும் இந்த ஆறு வழி சாலையில், நாள் ஒன்றுக்குச் சுமார் 63,000 வாகனங்கள் கடந்துசென்றன. தற்போது இந்தச் சாலையில் தினசரி 1.30 லட்சம் வாகனங்கள் கடந்துசெல்கின்றன.
இந்தத் திட்டம் ஆறு ஆண்டுகளுக்குமுன் முன்வைக்கப்பட்டது என்று ‘டிஎன்ஆர்டிசி’ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தத் திட்டத்தைப் பற்றிய விரிவான அறிக்கை மாநில அரசுக்குத் தாக்கல்செய்யப்பட்டது. நிதி ஆதாரம் திரட்டும் பணியில் தற்போது அரசு ஈடுபட்டிருக்கிறது.
இரண்டு திட்டங்களில் முதலில் 17.2 கிலோமீட்டர் நீளம் இருக்கும் அடுக்குச் சாலை முதலில் தொடங்கப்படவிருக்கிறது. இந்தத் திட்டம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகலாம். “சாலையில் அதிக இடத்தைக் கட்டுமானத்துக்காக எடுத்துகொள்ள முடியாது. அதனால், கூடுமானவரை கட்டுமான நேரத்தைக் குறைப்பதற்காக முன்னதாக வடிவமைக்கப்பட்ட கட்டமைப்புகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார் ‘டிஎன்ஆர்டிசி’ அதிகாரி ஒருவர்.
இந்த அடுக்குத் தடத்தை ஆறு-வழி சாலையில் திட்டமிடக் காரணம் அதன் அகலம்தான் என்கின்றனர் சி.எம்.ஆர்.எல். அதிகாரிகள். இதனால் கட்டுமானத்தை முடிப்பது எளிமையாக இருக்கும் என்று சொல்கின்றனர் அவர்கள். இந்தப் பாதை 22 கிலோ மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்படுகிறது. டைடல் பார்க், பெருங்குடி, ஒக்கியம்பேட்டை, இன்ஃபோசிஸ், சத்யபாமா பல்கலைக்கழகம், சிறுசேரி, சிப்காட் உள்ளிட்ட 22 நிலையங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
“இந்தத் தடத்தில் ஐடி துறையினர் அதிகமாகப் பயணிக்கின்றனர். அதனால், இந்தத் திட்டத்தை இரண்டாம் கட்டமாகத் தொடங்கவிருக்கிறோம்” என்று சொல்கிறார் அதிகாரி ஒருவர்.
சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்டத் திட்டத்திலும் ஒரு மேம்பாலம் வடபழனி வழியாக அமைக்கப்பட்டது. இதை முடிப்பதற்கு ஆறு ஆண்டுகளானது. “இந்த மாதிரி திட்டங்களை முடிப்பதற்கு 8 முதல் 10 ஆண்டுகள் ஆகும். சென்னை மெட்ரோ ரயில் வெற்றிபெறுவதற்குப் போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி முக்கியம். போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி இல்லாத மெட்ரோ ரயிலின் தேவை குறைவானதாக இருக்கும். ஏனென்றால், இந்தத் திட்டத்தை முடிக்க நீண்டகாலம் ஆகும். அதனால், குறுகிய காலத்துக்கு, விரைவுப் பேருந்து சேவை செலவு குறைந்த தீர்வாக இருக்கும்” என்று சொல்கிறார் ஐஐடி-மெட்ராஸ் போக்குவரத்துப் பொறியியல் துறை பேராசிரியர் கீதாகிருஷ்ணன் ராமதுரை.
“ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கிழக்குக் கடற்கரை சாலையை இணைப்பதற்குச் சரியான சாலைகள் இல்லை. ‘ஓ.எம்.ஆர்.’ போக்குவரத்து நெரிசலை இந்தச் சாலைக் கட்டுப்படுத்தும். சிறிய உட்சாலைகளைப் பயன்படுத்தும் இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டும்தான் கிழக்குக் கடற்கரை சாலைக்குச் செல்ல இந்தச் சாலையைப் பயன்படுத்துகின்றனர்” என்கிறார் போக்குவரத்தைத் திட்டமிடுபவர் ஒருவர். இந்தச் சாலையில் கட்டமைப்பு வளர்ச்சி இல்லாததால் வாகனங்கள் முக்கிய ‘கேரேஜ்வே’, ‘சர்வீஸ்’-வழிகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.
© தி இந்து (ஆங்கிலம்)
சுருக்கமாகத் தமிழில்: என். கௌரி