வாகன நிறுத்துமிடம் அதற்கு மட்டும்தானா?

வாகன நிறுத்துமிடம் அதற்கு மட்டும்தானா?
Updated on
2 min read

நா

ன் குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் சில மாதங்களுக்கு முன் புதிய சிக்கல் ஒன்று முளைத்தது. பொதுவாக அடுக்குமாடிக் குடியிருப்பில் வாகனம் நிறுத்துமிடம் பெரும் பிரச்சினைதான். அதுவும் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு என்றால் கேட்கவே வேண்டாம். கண்டிப்பாகப் பிரச்சினை இருக்கும். ஆனால் நான் சந்தித்த பிரச்சினை கொஞ்சம் வித்தியாசமானது.

எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் கீழ் வரிசையில் காற்று நன்றாகத் தவழ்ந்து வரும். அன்று காற்று வாங்குவதற்காக நான் நாற்காலியில் அமரப் போனபோது காலில் ஏதோ குத்தியது. பார்த்தால் மரத் துகள்கள். நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே தச்சர் ஒருவர் கட்டிலைக் கொண்டுவந்து வைத்தார். அதில் ஏதோ சரிசெய்ய வேண்டுமாம்! சிறிய கோபத்துடன் திரும்பினேன். அந்தத் தளத்தில் வசிப்பவர், “எங்களுடையதுதான், சீக்கிரம் வேலை முடிந்துவிடும்” என்றார் என்னைச் சமாதானப்படுத்தும் விதத்தில். ஆனால் வேலை சீக்கிரம் முடியவில்லை. எப்படி முடியும்? இப்போது மரத் துகளுடன் ஆணி, திருகாணி எல்லாம் சேர்ந்துகொண்டன. என்னைப் போல் வேறொரு தள உரிமையாளரும் இந்தச் சிரமத்தை அனுபவித்தார்.

“என்ன சார் இது? பேரனுக்காகப் படியில் காத்திருப்பேன். இனிக் கவனமாகப் பார்த்து உட்கார வேண்டும். ஆணி ஏதாவது குத்திவிட்டால் சிரமம் சார்” என்றார். அவருக்கு நீரிழிவு நோய் இருந்தது.

நல்ல காலமாகச் சில நாட்களில் வேலை முடிந்து, இடம் சுத்தமானது. அதுநாள் வரை வெளியில் நின்றிருந்த வாகனம் பின்னர் தன் இடத்துக்கு வந்து சேர்ந்தது. இதேபோல் வேறு ஒருவர் தன்னுடைய பழைய நாற்காலிகளை வாகன நிறுத்துமிடத்தில் கொண்டுபோய் வைத்துப் பிரித்து வேலை செய்தார். ஓரிரு நாளில் முடிந்த பிறகு நாற்காலிகளைப் பால்கனியில் வைத்து வார்னிஷ் பூசி பிறகு காரின் ஓரமாக வைத்தார்.

மேலே குறிப்பிட்ட நிகழ்வுகளாவது வீட்டின் உடைமைகளைப் பழுது பார்த்து மராமத்து செய்யும் வேலைகளில் அடங்கும். இன்னொரு மனிதர், தன் வாகனம் நிறுத்துமிடத்தில் உலர் சலவை இயந்திரத்தைக் கொண்டுவந்து வைத்தார். அதுமட்டுமல்ல தொடர்ந்து லாரியில் குக்கர் போன்ற சாதனங்களை அடுக்கிவைத்தார். அதனால் அடுக்குமாடிக் குடியிருப்புக் காவலருக்குக்கூடச் சரியானபடி உட்கார இடமில்லாமல் ஆனது. சின்ன நாற்காலியில் வெயிலில் உட்காரலானார். மேலும் லாரி அடிக்கடி வருவதால் குடியிருப்பு வாசிகள் தங்கள் வாகனங்களை எடுக்க முடியாமல் ஆனது.

“என்ன சார் இது? கார் நிறுத்துமிடத்தில் இதுபோல்?” என மெதுவாகக் கேட்டேன். “இது எனக்காக ஒதுக்கப்பட்ட இடம்தானே நான் என்ன வேண்டுவானாலும் செய்வேன்” என்றார். நான் அடக்கிக்கொண்டேன்.

இவர் எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்புச் செயலருக்கு நெருக்கம். அதன் மூலம் இவ்வளவு சுதந்திரமாகச் செயல்படுகிறார் எனத் தெரியவந்தது. அவர் ஏதோ சாதனங்களை இலங்கைக்கு ஏற்றுமதிசெய்கிறார். அதன் மூலம் நல்ல லாபம் என அவர் வேறொருவரிடம் பேசிக் கொண்டதைக் கேட்டேன்.

இதில் கவனிக்க வேண்டியது, வாகனம் நிறுத்துமிடம், வாகனத்துக்கு மட்டுமானதா என்பது. அதில் வேறு தொழில் செய்யலாமா? ஆனால், எனக்குத் தெரிந்த வழக்கறிஞர் நண்பர் வாகனம் நிறுத்துமிடம் வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்த முடியாது. அப்படிப் பயன்படுத்தினால் அதை எதிர்த்து வழக்குத் தொடர முடியும் என்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in