Last Updated : 12 Jul, 2014 10:00 AM

 

Published : 12 Jul 2014 10:00 AM
Last Updated : 12 Jul 2014 10:00 AM

ஆழ்குழாய் நீர் தரமானதா?

கடும் வறட்சியால் தொடரும் தண்ணீர்ப் பற்றாக்குறை ஒருபுறம் இருக்கிறது. இன்னொரு புறம் அதன் தன்மை மாறுவதால் குடிப்பதற்கும் கட்டுமானத்திற்குமான தகுதியைத் தண்ணீர் இழப்பதாக அண்மையில் நடைபெற்ற ஆய்வு முடிவில் இருந்து தெரியவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகப் பருவமழை பொய்த்ததாலும் காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாகக் குறைந்து வருவதாலும் புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துகொண்டே செல்கிறது.

இதனால், குடிநீர், விவசாயம், கட்டுமானம் உள்ளிட்ட பணிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தகைய தண்ணீர்ப் பற்றாக்குறையையும் தாண்டி கிடைக்கும் தண்ணீரைக் குடித்தாலும் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துதல் உள்பட வேறு பல பிரச்சினைகள் இருப்பதாகத் தண்ணீர் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வகத்தினரின் அறிக்கைதான் மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

ஆழ்குழாய் கிணறு அமைத்து அதன்மூலம் வெளிக்கொணரப்படும் தண்ணீரை ஆய்வு செய்து அதில் குடிநீருக்கான தகுதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கட்டிடம் கட்டும்போது கட்டுமானத்துக்கு ஆழ்குழாய் நீர் உகந்ததா என்பதையும் சோதித்துக்கொள்ள வேண்டுமென்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.

தற்போது ஆழ்குழாய் நீரை அதிகம் பயன்படுத்தும் நிலையில் நம்மில் எத்தனை பேர் இதைச் செய்கிறோம் என்பதுதான் கேள்வி. அப்படி இது என்ன அவசியமானது என்ற கேள்விக்கு ஆய்வகத்தினர் தரும் பதில் அதிரவைப்பதாக இருக்கிறது.

குடிநீரில், கட்டிடங்களில் பாதிப்பு ஏற்பட்டால் முதலில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வது தண்ணீர் சோதனை அறிக்கைதான்.

அண்மையில் சென்னை அருகே மவுலிவாக்கத்தில் ஜூன் 28-ல் 11 மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்தவுடன், கட்டுமானத்துக்குப் பயன்படுத்திய தண்ணீரின் சோதனை அறிக்கை குறித்து அரசு தீவிரமாக ஆய்வு மேற்கொண்டுள்ளது.

இது குறித்துப் புதுக்கோட்டை மாவட்ட தண்ணீர் ஆய்வகத் தரப்பினர் கூறியது:

தண்ணீரில் உப்புத் தன்மை குறைந்தாலும், மிகுதியாக இருந்தாலும் நீரில் கரைந்துள்ள நுண்பொருள்களின் தன்மையும் மாறுகிறது. அவ்வாறு மாறுதலுக்குள்ளான தண்ணீரைக் குடிப்பதால்தான் உடல்நலத்துக்குக் கேடு ஏற்படுகிறது.

கடந்த ஜூன் மாதத்தில் ஒருவரது தனி நபர் ஆழ்குழாய்த் தண்ணீரை ஆய்வு மேற்கொண்டதில் புதுக்கோட்டை, ராஜகோபாலபுரம் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட அந்தத் தண்ணீர் கட்டுமானத்துக்கு உகந்தது இல்லையெனத் தெரியவந்தது.

அதேபோல, அன்னவாசல் அருகே வயலோகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை. இதுபோல பல பகுதிகளுக்கு அறிக்கை கொடுத்துள்ளோம். மாதந்தோறும் குடிநீர் வடிகால் வாரியத்துக்குக் கொடுக்கப்படும் சோதனை அறிக்கையில் குறை காணப்பட்டால் அதற்கு ஏற்ப அந்தத் துறையினர் மாற்று நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால், மக்களிடையேதான் இதற்கான விழிப்புணர்வு இல்லை.

மழை பெய்து நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்தால்தான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மழையளவு குறைந்துள்ளதால் மழைநீரை நிலத்தில் செறிவூட்டுவதற்கு அரசு எடுத்துள்ள தீவிர முயற்சியான மழைநீர் சேகரிப்புதான் மாற்று நடவடிக்கையாகும்.

மேலும் தண்ணீரை ஆய்வு செய்வதற்காகக் குடிநீர் மற்றும் கட்டுமானத்துக்கு என தலா ரூ.500 வங்கி வரைவோலையுடன் வெள்ளை நிற கேனில் 2 லிட்டர் தண்ணீரைக் கொடுத்தால் அதிகபட்சம் 4 நாள்களில் முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றனர்.

இதேபோல, தமிழகம் முழுவதும் பல இடங்களில் தண்ணீரில் குறை இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடலில் இருந்து சுமார் 60 கிலோமீட்டரில் குறை கண்டறியப்பட்டுள்ள நிலையில் கடலோரப்பகுதி மக்கள் என்ன செய்வார்கள்?.

தண்ணீர் அதிகரித்தால் மனிதன் நோயின்றி வாழலாம். தண்ணீர் குறைந்தால் அதன் பற்றாக்குறையோடு நோய்களையும் சுமக்க வேண்டிவரும். எனவே, அனைவரும் மழைநீரைச் சேகரிப்பதும் நீர்த்தேக்கப் பகுதிகளைப் பாதுகாப்பதும் அவசியமென்பதை உணர வேண்டும்.

தண்ணீரில் என்னென்ன இருக்க வேண்டும்?

குடிநீராக இருந்தால் ஒரு லிட்டர் தண்ணீரில் கரைந்துள்ள மொத்த உப்பு 500 மி.கிராமிலிருந்து அதிகபட்சமாக 2,000 மி.கிராம் வரை இருக்கலாம். அதேபோல, கலங்கல் 1-5 மி.கிராமும், பிஎச் 6.5 - 8.5, காரத்தன்மை, கடினத்தன்மை, சல்பேட் 200 - 600 மி.கிராம், கால்சியம் 75 - 200 மி. கிராம், மெக்னீசியம் 30 - 100 மி.கிராம், இரும்பு 0.3 மி.கிராம், மாங்கனீசு 0.1 - 0.3, அமோனியா 0.5, நைட்ரைட் 45, குளோரைடு 250 - 1000, புளோரைடு 1.0 - 1.5, வீழ்படிவு 0.2 - 1.0 மி.கிராம் மற்றும் இதன் நிறம், மனமும் உரிய அளவில் இருந்தால் மட்டுமே அந்தத் தண்ணீர் குடிப்பதற்குத் தகுதியானதாக இருக்க முடியும்.

இதேபோல கட்டுமானத்திற்கும் பிஎச் 6.0-மி.கிராம், காரத்தன்மை 250 மி.கிராம், அமிலத்தன்மை 50மி.கிராம், கனிமம் 200 மி.கிராம், கரிமம் 3000 மி.கிராம், படிந்திருக்கும் உப்பு 2000 மி.கிராம், குளோரைடு 2000 மி.கிராம் , சல்பேட் 400 மி.கிராம் என்ற அளவில் உள்ள தண்ணீரை மட்டுமே கட்டுமானத்துக்குப் பயன்படுத்த வேண்டும். இதில் கான்கிரீட் போடும்போது குளோரைடு அதிகபட்சம் 500 மி. கிராம் உள்ள தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அரசு வரையறை விதித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x