இன்வெர்ட்டர் அவசியமா?

இன்வெர்ட்டர் அவசியமா?
Updated on
2 min read

மி

ன்சாரத் தேவை என்பது மிகவும் அத்தியாவசியமான இக்காலக் கட்டத்தில் சிறிது நேர மின்தடையைக்கூட நம்மால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. இதனால் இன்வெர்ட்டர் அமைப்பது தேவையா, இல்லையா? என்பது மிகப் பெரிய கேள்வி. ஏனென்றால், தமிழகத்தில் ஏறக்குறைய மின்வெட்டோ மின் தட்டுப்பாடோ தற்போது இல்லை என்பதால் இன்வெர்ட்டர் என்பது தேவையில்லைதான். ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு நாள் மின்சார வாரியம் பராமரிப்புக்காகக் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 அல்லது 3 மணிவரை மின்தடை ஏற்படும்போதும் இன்வெர்ட்டர் பயன்படும். இது தவிர வேறு காரணங்களுக்காகச் சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டாலும் இன்வெர்ட்டர் நமக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

கடலோரப் பகுதியில் மழைக்காலங்களின் ஏற்படும் மின்தடை நேரத்தில் இன்வெர்ட்டரின் பயன் மிக மிக அதிகம். ஆனாலும், அதிகபட்சம் நமது பயன்பாட்டைப் பொறுத்து சுமார் 6 முதல் 8 மணிநேரம் வரை பயனளிக்கும். இதற்காக சுமார் 20,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய்வரை நமது வீட்டுக்காகச் செலவு செய்ய வேண்டுமா, என்பதை முடிவு செய்ய வேண்டியது நாம்தான்.

சரி இன்வெர்ட்டர் அமைக்க வேண்டுமென முடிவெடுத்துவிட்டால் புதிய வீடு கட்டும்போது அதற்கெனத் தனியாக ஒரு இடத்தை அமைப்பது நல்லது. அந்த இடம் குழந்தைகள் அணுக இயலாத அளவிலும் அமைக்க வேண்டும். அதற்காக உயரமான இடமாக இல்லாதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஏனென்றால், இன்வெர்ட்டருடன் இணைந்த பேட்டரியின் பராமரிப்புக்காக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பேட்டரிக்குத் தேவையான டிஸ்டில் வாட்டர் ஊற்றிப் பராமரிக்க வேண்டும் என்பதால் அதற்கு ஏற்ற இடமாக அமைக்கப்பட வேண்டும். தரைதளத்துக்குச் சற்று மேலே கதவுடன் கூடிய கட்டமைப்பை இதற்காகச் செய்துகொள்வது நல்லது.

இன்வெர்ட்டர் அமைத்த பிறகு அதை அப்படியே விட்டுவிடாமல் அடிக்கடி கவனித்துக் கொள்வதோடு, மின்சாரம் தடைபடாத காலங்களில் வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளோ உங்களுக்கு வசதியான ஒரு நாளிலோ தங்கள் வீட்டின் மின்சார இணைப்பை அணைத்துவிட்டு இன்வெர்ட்டரை இயங்க வைக்க வேண்டும். ஒரு மணிநேரமாவது அதிலிருந்து மின்சாரத்தைப் பயன்படுத்திவிட்டு பிறகு வழக்கம் போல மின்சார வாரிய இணைப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

உங்கள் பகுதியில் வாரத்தில் இரு முறையோ அதற்குக் கூடுதலான நேரமே மின்சாரம் வரவில்லையென்றால் இது போன்று செய்ய வேண்டாம். ஏனென்றால், அப்போது இன்வெர்ட்டர் தானாகவே பேட்டரியிலுள்ள மின்சாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிடும். இப்படிச் செய்வதால் பேட்டரியிலுள்ள மின்சாரம் செலவழிந்து புதிதாக மின்சாரத்தைச் சேமிக்கத் தொடங்கும். இதனால் நமது பேட்டரி அந்த நிறுவனத்தின் உறுதிமொழி அளித்த காலம்வரை பயன்பாட்டில் இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in