

ஹை
தராபாத்தில் அமைந்திருக்கும் பிரபல ‘தி தாஜ் ஃபலக்நுமா’ மாளிகையின் ‘101 டைனிங் ஹால்’ சமீபத்தில் செய்திகளில் அடிபட்டிருக்கிது. ஆறாவது நிஸாம் மெஹ்பூப் அலி பாஷா விருந்தினர்களுக்கு விருந்தளித்த இந்தப் பிரம்மாண்டமான உணவு அறையில், டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி விருந்து அளித்திருத்திருக்கிறார்.
இந்த விருந்தின் காரணமாக ஒரே நேரத்தில் 101 பேர் அமர்ந்து சாப்பிடும் இந்த உணவு அறையும் ஃபலக்நுமா மாளிகையும் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. உருதுவில் ‘ஃபலக்நுமா’ என்பதற்கு ‘ஆகாயத்தின் பிம்பம்’ என்று அர்த்தம். இந்த மாளிகையில் அமைந்திருக்கும் பெரிய அறைகளில் ஒன்றாக ‘101 டைனிங் ஹால்’ இருக்கிறது. இந்த அறையில் அமைக்கப்பட்டிருக்கும் உணவு மேசை 80 அடி நீளம் கொண்டது. ஏழு பகுதிகளாகப் பிரித்து இணைக்கப்பட்டிருக்கும் இந்த மேசை 5.7 அடி அகலமும், 2.7 அடி உயரமும் கொண்டது.
இந்த ஃபலக்நுமா மாளிகை 32 ஏக்கர் பரப்பளவில் ஒரு தேளின் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 400 ஆண்டு கால நிஜாம்களின் வாழ்க்கைமுறையைப் பறைசாற்றும் சாட்சியாக இந்த மாளிகை திகழ்கிறது. அரச வாழ்க்கையின் செழுமையை உணர்த்தும் வெனிசீய சரவிளக்குகள், அரிய கலைப் பொருட்கள், அலங்காரச் சட்டகங்களில் அடைபட்டிருக்கும் சுவரோவியங்கள் போன்றவை இந்த மாளிகையின் உள் அலங்காரச் சிறப்பை உணர்த்துவதாக இருக்கின்றன.
இந்தச் உணவு அறையில் இடம்பெற்றிருக்கும் 28 ஓவியங்களில் பல்வேறு உணவுப் பண்டங்கள் இருக்கின்றன. இந்த ஓவியங்களில் இருக்கும் உணவுப் பண்டங்களில் தான் சாப்பிட நினைப்பதை நிஜாம் சுட்டிக்காட்டுவாராம். அந்த உணவு அதற்குப் பிறகு அவருக்குப் பரிமாறப்படுமாம். இந்த உணவு அறையில் இடம்பெற்றிருக்கும் 101 நாற்காலிகளும் பச்சை நிறத் தோலில் ஒரே மாதிரியாகத் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த நாற்காலிகளில் நிஜாம் பயன்படுத்திய நாற்காலிகளின் கைப்பிடிகள் மட்டும் சற்று உயரமாக இருக்கிறது.
1893-ம் ஆண்டு, கட்டப்பட்ட இந்த ஃபலக்நுமா மாளிகையை ‘பைகா’ (Paigaah) குடும்பத்தினரிடமிருந்து வாங்கியிருக்கிறார் நிஸாம். இந்த மாளிகை இத்தாலிய, ட்யுடர் கட்டிடக் கலைகளின் பிரம்மாண்டமான கலவையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த மாளிகையில் 60 அறைகளும் 22 பேரறைகளும் (Halls) இருக்கின்றன. 1950- களுக்குப் பிறகு, இந்த மாளிகை பொதுப் பயன்பாட்டில் இல்லை. 1951-ம் ஆண்டு, இந்த மாளிகையின் கடைசி விருந்தாளியாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் இருந்திருக்கிறார். அதற்குப் பிறகு, இந்த மாளிகையை ‘தாஜ் ஹோட்டல் குழுமம்’ 2010-ம் ஆண்டு குத்தகைக்கு எடுத்துப் புதுப்பித்திருக்கிறது. தற்போது இந்த மாளிகையை எட்டாம் நிஸாமுடைய மனைவி இளவரசி எஸ்ரா நிர்வகித்துவருகிறார். இந்த மாளிகையின் அறையில் விருந்தாளியாக ஒரு நாள் தங்குவதற்கு ரூ. 5-8 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.