கட்டிடம் சொல்லும் கதைகள் 06: கலாச்சாரத்தின் அடையாளமான கோயில்!

கட்டிடம் சொல்லும் கதைகள் 06: கலாச்சாரத்தின் அடையாளமான கோயில்!
Updated on
2 min read

கோ

யில்கள் ஆன்மிகத் தலங்கள் மட்டுமே அல்ல. அவை, வரலாற்றின் நறுமணமும்கூட. கோயில்கள், கலைகளை வளர்த்திருக்கின்றன. கோயில்கள், இலக்கியங்களைக் காப்பாற்றியிருக்கின்றன. கோயில்கள், வயிற்றுக்குச் சோறிட்டிருக்கின்றன. கோயில்கள், இயற்கைச் சீற்றங்களின்போது அடைக்கலமாகவும் இருந்திருக்கின்றன.

பொதுவாகவே, தமிழகத்தில் உள்ள கோயில்கள், அவற்றின் கட்டிடக் கலைகளுக்காகப் பேசப்படுபவை. அதிலும், திருச்சியில் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில், உலக அளவில் பேசப்படக்கூடியது. அதற்குக் காரணம், சுமார் 150 ஏக்கருக்கு மேல் பரந்து விரிந்து பிரம்மாண்டமாய் எழுந்திருக்கும் அதன் கட்டிடங்கள். அதனால் இந்தக் கோயில் ‘உலகில் இயங்கிவரும் மிகப் பெரிய கோயில்’ என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இங்கு ஆண்டுக்கு 320 நாட்கள் ஏதேனும் ஒரு விசேஷம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.

16JKR_1000PILLAR.1

பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயிலின் கட்டிட அமைப்புகள், பழமை மாறாமல் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதைப் பாராட்டும் விதமாக, சமீபத்தில் இந்தக் கோயிலுக்கு ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அங்கமான யுனெஸ்கோவால் 2017-ம் ஆண்டுக்கான ‘ஆசியா பசிஃபிக் அவார்ட் ஆஃப் மெரிட்’ விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் தமிழ்நாட்டுக் கோயில் இது.

சிலப்பதிகாரம் முதற்கொண்டு பல சங்க இலக்கியங்களில் இந்தக் கோயிலைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன. வைணவம் போற்றும் 108 திவ்ய தேசங்களில், இந்தக் கோயில் முதன்மையானது. இதைச் சுற்றி காவிரியும் கொள்ளிடமும் ஓடுகின்றன.

உறையூரைச் சேர்ந்த முற்காலச் சோழர்கள், பழையாற்றைச் சேர்ந்த பிற்காலச் சோழர்கள், கொங்கு மன்னர்கள், பாண்டியர்கள், ஹொய்சாலர்கள், விஜயநகரப் பேரரசு மன்னர்கள் என வரலாற்றின் நெடுகிலும், பல ஆட்சியாளர்கள் இந்தக் கோயிலைப் போற்றி வளர்த்தனர்.

திராவிடக் கட்டிடக் கலைப் பாணியில் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோயில் 7 சுற்று மதில்களைக் (பிரகாரங்கள்) கொண்டது. இந்த மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 72 மீட்டர் (236 அடி) உயரம் கொண்ட ராஜகோபுரம் இந்தியாவிலேயே மிக உயரமானது. உலக அளவில் இரண்டாவது பெரிய கோபுரம் இது. செங்கல், மணல், கருங்கல், சிமெண்ட், இரும்புக் கம்பிகள் ஆகியவற்றைக் கொண்டு இந்தக் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

ஆயிரங்கால் மண்டபம் (உண்மையில் 953 தூண்கள் மட்டுமே கொண்ட மண்டபம்) இந்தக் கோயிலின் இன்னொரு சிறப்பு. விஜயநகரப் பேரரசு காலகட்டத்தில், கிரானைட் கற்களால் இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

இவை தவிர, 50 சிறு கோயில்கள், 9 நவ தீர்த்தங்கள், 5 நெற்களஞ்சியங்கள் ஆகியவை உள்ளன. மேலும், இங்கு சந்திர புஷ்கரணி, சூரிய புஷ்கரணி என்ற இரண்டு பெரிய தெப்பக்குளங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் 20 லட்சம் லிட்டர் நீரைத் தேக்கிவைக்க முடியும். கோயிலின் உள்ளே இயற்கைச் சாயங்கள் கொண்டு ஆன்மிக ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்தக் கோயிலின் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. சுமார் 20 கோடி ரூபாய் செலவில், கோயிலின் கோபுரங்கள், சிற்பங்கள், நெற்களஞ்சியங்கள், மண்டபங்கள் ஆகியவை பாரம்பரிய முறைப்படி புனரமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளின் போது சுமார் 60 ஆயிரம் டன் கட்டிடக் கழிவு தூசு தட்டப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தப் புனரமைப்புப் பணிகள் முடிந்தவுடன், மே மாதத்தில் யுனெஸ்கோ விருதுக்கு இந்து சமய அறநிலைத் துறை விண்ணப்பித்தது. இந்த விருது கிடைக்க, கடந்த இரண்டு ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகளும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.

யுனெஸ்கோ விருதுக்காக இந்தக் கோயில் தேர்வுசெய்யப்பட்டதற்கு நான்கு முக்கியக் காரணங்களை யுனெஸ்கோ ஆய்வுக் குழு பட்டியலிட்டுள்ளது. அவற்றில் இரண்டு காரணங்கள், கோயிலின் கட்டிடக் கலையை மையப்படுத்தி உள்ளன.

ஒன்று, இப்படி ஒரு பிரம்மாண்டக் கோயிலைக் கட்டுவதற்கான மனிதப் படைப்பாற்றல் திறன். அதன் மூலம், கட்டிடங்களையும் அலங்காரங்களையும் சிறந்த முறையில் தன்னகத்தே கொண்டிருக்கிறது இந்தக் கோயில். இரண்டாவது, இந்தக் கோயில் வெறும் கோயிலாக மட்டுமே அல்லாமல், இதைச் சுற்றி ஊர்களும் தோன்றியிருக்கின்றன. எனவே, இந்தக் கோயில் நகர நிர்மாணத்துக்கும் ஆதாரமாக இருக்கிறது.

இத்தகைய பெருமைகளைக் கொண்ட இந்தக் கோயில், ‘பூலோக வைகுண்டம்’ என்றும் சொல்லப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in