

ஒ
ரு சிறிய பிளாஸ்டிக் பெட்டியைப் போலதான் இருக்கிறது ஸ்மார்ட் ஹப் (smart hub). இதுதான் நம் ஸ்மார்ட் வீட்டில் பொருள்களை இயக்குகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், ஸ்மார்ட் வீடுகளில் உள்ள எந்த நவீன உபகரணங்களும் ஸ்மார்ட் ஹப் இல்லாமல் இயங்குவதில்லை. இணையத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வீடுகளின் உயிர்மூச்சு இந்த ஸ்மார்ட் ஹப்தான். ஸ்மார்ட் கைப்பேசியில் உள்ள செயலிகள் மூலம் இயக்கப்படும் விளக்குகளும் வெப்பச் சீராக்கிகளும் ஒலிப்பான்களும் எப்படிச் செயல்படுகின்றன என்பதை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். ஆனால், ரௌட்டருடன் (router) இணைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் ஹப் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பார்ப்போமா?
பெரும்பாலும் வீட்டில் உள்ள ஸ்மார்ட் சாதனங்கள் வயர்லெஸ் மூலம்தான் இணையத்தில் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த ஸ்மார்ட் ஹப் எப்போதும் கம்பி வழியாகத்தான் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ஹப் தனக்கென்று தனிச் செயலியைக் கொண்டிருக்கும். இந்தச் செயலியின் மூலம் இது வீட்டில் உள்ள அனைத்து ஸ்மார்ட் சாதனங்களையும் கட்டுப்படுத்தும்.
இந்தத் தொழில்நுட்பத்தில் இணைக்கப்பட்ட கருவிகள் வீட்டின் எந்த அறையில் இருந்தாலும், அவற்றை ஸ்மார்ட் ஹப் மூலம் இயக்கலாம். வரவேற்பறையில் உள்ள ஹோம் தியேட்டர், வீட்டுக்கு வெளியே உள்ள பாதுகாப்பு கேமரா, குளியலறையில் உள்ள ஹீட்டர், படுக்கையறையில் உள்ள குளிர்ப்பான், சமையலறையில் உள்ள காபி தயாரிக்கும் கருவி போன்ற எதுவாக இருந்தாலும் இருந்த இடத்தில் இருந்தபடியே உங்கள் கைப்பேசியில் உள்ள செயலியின் மூலம் எளிதாக இயக்க முடியும்.
வழக்கமான செயல்களைத் தினமும் செயல்படுத்தும் வண்ணம் இதற்கு நாம் அட்டவணை போட்டுக் கொடுக்கலாம், மேலும், இந்த ஸ்மார்ட் ஹப் IFTTT வகை செயல்பாடுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும். IFTTT (if this then that) என்றால், இப்போது இந்தச் சாதனம் இயங்கினால் அதற்கு அடுத்து என்ன சாதனம் இயங்க வேண்டும் என்று திட்டமிடுவது ஆகும். உதாரணத்துக்கு நீங்கள் வீட்டுக் கதவின் தாழ்ப்பாளைத் திறந்தீர்கள் என்றால், அதில் உள்ள உணரியின் மூலம் ஸ்மார்ட் ஹப் அதை உணர்ந்து, அதற்கு அடுத்ததாக வீட்டில் உள்ள விளக்கை எரியவிடும், அதைத் தொடர்ந்து மின் விசிறியை ஓட வைக்கும். இவ்வாறு இந்த ஸ்மார்ட் ஹப் வீட்டில் உள்ள அனைத்து ஸ்மார்ட் சாதனங்களையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்ளவைக்கும்.
காலையில் தூக்கத்திலிருந்து விழித்து, கண்ணைத் திறந்தவுடன் படுக்கையில் சோம்பல் முறித்தபடியே, ‘ஹே கூகுள்’ என்று சொன்னால், கூகுள் ஹோமில் உள்ள மைக்குகள் நீங்கள் விழித்துவிட்டதை ஸ்மார்ட் ஹப்புக்குத் தெரிவிக்கும். பின் ஸ்மார்ட் ஹப் IFTTT மூலம் படுக்கையறையில் விளக்கை எரியவைத்து மெல்லிய வெளிச்சத்தைப் பரவவிடும். அதன் பின் குளியலறையில் ஹீட்டரை இயங்கவைக்கும். அதே சமயம் சமையலறையில் காபி தயாரிக்கும் கருவியை இயங்கச் செய்யும். நீங்கள் காபி அருந்தும் போது, வெளியில் நாளிதழ் வந்துவிட்டதை கேமரா மூலம் கண்டுணர்ந்து உங்களுக்குத் தெரிவிக்கும்.
நீங்கள் அலுவலுகத்தில் வேலைசெய்துகொண்டிருக்கும்போது, உங்கள் வீட்டின் கதவின் தாழ்ப்பாளை யார் தொட்டாலும், உடனடியாக ஸ்மார்ட் ஹப்பின் எச்சரிக்கை உங்கள் கைப்பேசியை வந்துசேரும்.
‘என் வீட்டில் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் படி வேலைசெய்யும் நவீன சாதனங்கள் ஏற்கெனவே உபயோகத்தில் உள்ளன, இந்த நிலையில் ஸ்மார்ட் ஹப்பால் எனக்கு என்ன பயன்? அல்லது நான் பானசோனிக் அல்லது சாம்சங் தயாரிக்கும் நவீன ஸ்மார்ட் பாதுகாப்பு அமைப்பை வாங்கி நிறுவத் திட்டமிட்டுள்ளேன். அந்த அமைப்பில் ஸ்மார்ட் ஹப் உள்ளடங்கி உள்ளது. நான் ஏன் தனியாக ஸ்மார்ட் ஹப் வாங்க வேண்டும்?’ என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம்.
நீங்கள் கேட்பது சரிதான். பானசோனிக் போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் ஸ்மார்ட் பாதுகாப்பு சாதனங்கள் தங்களுக்குள் ஸ்மார்ட் ஹப்பைக் கொண்டுள்ளன என்பது சரியே. ஆனால், இதில் பிரச்சினை என்னவென்றால், இந்த ஸ்மார்ட் ஹப்கள் தங்கள் நிறுவனம் தயாரிக்கும் ஸ்மார்ட் சாதனங்களை மட்டுமே இயக்கக்கூடியவை. இதன் பாதகம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
மேலும், பெரும் நிறுவனங்கள் தயாரிக்கும் ஸ்மார்ட் சாதனங்கள், அவற்றைக் கைப்பேசியின் மூலம் இயக்குவதற்குச் செயலிகளைக் கொண்டுள்ளன. ஆனால் சில ஸ்மார்ட் சாதனங்கள் தங்களுக்கென்று செயலிகளைக் கொண்டிருப்பதில்லை. இந்தச் சாதனங்கள் திறன்மிக்கதாகவும் விலை குறைவாகவும் இருந்தாலும் நம்மால் அதைக் கைப்பேசி வழியாக இணைக்க முடியாததால் நாம் பெரும் நிறுவனங்களின் தயாரிப்புகளை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம்.
ஸ்மார்ட் ஹப் என்ற ஒன்றை நீங்கள் தனியாகப் பயன்படுத்தினால், அது எந்த நிறுவனத்தின் சாதனங்களையும் இயக்கும் திறனை தன்னகத்தே கொண்டிருக்கும். இது நீங்கள் விரும்பும் நிறுவனத்தின் சாதனங்களை உங்கள் தேவைக்கு ஏற்றபடி தேர்வு செய்யும் சுதந்திரத்தை அளிக்கும். இது மட்டுமின்றி, தனித் தனி தீவுகளாகத் தனித் தனி செயலிகளைக் கொண்டு இயங்கும் ஸ்மார்ட் சாதனங்களை, ஒரே செயலியின் குடைக்குள் ஸ்மார்ட் ஹப் கொண்டுவரும். இதனால் அனைத்துச் சாதனங்களையும் கட்டுப்படுத்துவது நமக்கு எளிதாகிறது.
Samsung’s SmartThings Hub, The Amazon Echo Dot, Wink Hub 2, Logitech’s Harmony Hub, VeraEdge Home Controller, Securfi Almond 3, Apple HomePod போன்ற ஸ்மார்ட் ஹப்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இவை ரூபாய் 6,000 முதல் ரூபாய் 8,000/- வரையிலான விலைகளில் சந்தையில் கிடைக்கின்றன.
நம் வாழ்வை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுதான் ஸ்மார்ட் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இப்போது பிரமிக்கவைக்கும் விதமாக வளர்ந்து நிற்கிறது. இந்த வளர்ச்சியால் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நாம் வசிக்கும் வீடு நம் கைக்கு எட்டும் தூரத்தில் வந்துவிடுகிறது. வீட்டினுள்ளோ ஒரு மாயாஜால உலகில் வசிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தி ஆச்சரியங்களையும் சௌகரியங்களையும் வாரி வழங்கிக்கொண்டிருக்கின்றது.