Published : 18 Nov 2017 12:00 pm

Updated : : 18 Nov 2017 12:00 pm

 

தங்கக் கோட்டை

 

மெரிக்க அரசிடம் தங்கம் எக்கச்சக்கமாக இருக்கிறது. அவற்றை எங்கே அது வைத்திருக்கிறது தெரியுமா? கென்டுகி என்ற இடத்தில் ஒரு பாதுகாப்பான பகுதியில் வைத்திருக்கிறது. குறிப்பாக எந்த இடத்தில்? நாக்ஸ் கோட்டையில் (Fort Knox). வட கென்டுகியிலுள்ள அமெரிக்க ராணுவ கேந்திரம் அது. ஒரு லட்சத்துக்கும் அதிக ஏக்கர் பரப்பு கொண்டது. 14.73 கோடி அவுன்ஸ் தங்கக் கட்டிகள் இந்தக் கோட்டையின் உள்ளே உள்ள பாதுகாப்புப் பெட்டகங்களில் உள்ளன. இன்றைய தேதிக்கு 170 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டது (ஒரு பில்லியன் என்பது 100 கோடி).

இந்தக் கோட்டையை 1936 டிசம்பரில் கட்டி முடித்தது அமெரிக்க ராணுவம். 1937 ஜனவரியில் பல கப்பல்கள் மூலமாகத் தங்கம் இங்கே எடுத்து வரப்பட்டது. 1971-லேயே தங்க அளவீட்டைக் கொண்டு மதிப்பிடும் முறையிலிருந்து அமெரிக்கா பின்வாங்கிக் கொண்டது. என்றாலும் தங்கம் என்பது பெரும் சொத்துதானே!

யாருக்காவது இந்தத் தங்கத்தைக் கொள்ளையடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தால் அதற்குச் சுலபமான வழிமுறை இருக்கிறது. கோட்டை நாக்ஸைச் சுற்றியுள்ள பாதுகாப்பு வேலிகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். அவற்றில் இரண்டு மின் இணைப்பு கொண்டவை. மறக்காமல் வீடியோ கேமராக்களைத் தவிர்க்க வேண்டும். கிரானைட் சுவர்களை உடைத்துவிட வேண்டும். ஒவ்வொரு சுவரும் நான்கு அடி அகலம் கொண்டது. இந்தச் சுவர்களுக்கிடையே 750 டன் எஃகு கம்பிகளும் உள்ளன. ராணுவக் காவலாளிகளைத் தாண்ட வேண்டும். பலவித பூட்டப்பட்ட கதவுகளை உடைக்க வேண்டும்.


உள்ளே இருக்கும் 22 டன் பாதுகாப்புப் பெட்டகத்தின் கதவு உங்களை வரவேற்கும். அதைத் திறப்பது ஒன்றும் கஷ்டமில்லை. அங்குள்ள அத்தனை முக்கிய ஊழியர்களுக்கும் அதற்கான சர்வதேச எண்கள் உண்டு. (ஆனால் ஒவ்வொருவரிடமும் ஒரு பகுதிதான் இருக்கும். மற்றவர்களிடம் புதைந்திருக்கும் சங்கேத எண் அவர்களுக்குத் தெரியாது. தவிர இந்த எண்கள் தினமும் மாற்றப்படுகின்றன).

இந்தப் பெட்டகத்தைத் திறந்துவிட்டால் உள்ளே சிறு சிறு பெட்டகங்களில் 5,000 டன் தங்கக் கட்டிகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. எடுத்துக் கொண்டு வெளியே வர வேண்டியதுதான். ஆனால் என்ன, வெளியே சுமார் 30,000 ராணுவ வீரர்கள், துப்பாக்கியுடன் உங்களுக்காகக் காத்திருப்பார்கள். காரணம் கோட்டையைச் சுற்றி நான்கு காவல் நிலையங்கள் உள்ளன. அவற்றில் மெஷின் கன்களைத் தாங்கிய வீரர்கள் தயார் நிலையில் இருப்பார்கள்.

நாக்ஸ் கோட்டையிலுள்ள ஜன்னல்கள் உட்புறமும், வெளிப்புறமும் கண்ணாடிகளால் சீல் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கண்ணாடிகள் தீப்பற்றாதவை, குண்டுகளால் பிளக்காதவை. வெளியிலிருந்து யாரும் இவற்றின் வழியாக உள்ளே இருப்பதைப் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக இந்த ஜன்னல்களுக்குக் கறுப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது.

இதன் கதவைத் திறக்கும் ஊழியர்களின் ஷிப்டுகள் திடீர் திடீரென்று முன்னறிவிப்பின்றி மாற்றப்படும்.

சமீபத்தில் அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்டீவன் நுசீன் என்பவர் நாக்ஸ் கோட்டையை விசிட் செய்தார். இப்படியொரு அதிகாரபூர்வ நிகழ்வு என்பது மிகவும் அரிதான ஒன்று. “அங்கு நான் எதிர்பார்க்கும் தங்கம் இருக்குமென்று நினைக்கிறேன். நாங்கள் அங்கு செல்லும்போது அங்கு தங்கம் இல்லையென்றால் அது ஒரு திரைப்படத்தைப் போலதான் இருக்கும்’’ என்றார். அவர் முன்னர் ஹாலிவுட் படத் தயாரிப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாக்ஸ் கோட்டையின் வெளிப்புறம் ஜேம்ஸ் பாண்ட் படமான Goldfinger-ல் இடம் பெற்றது.

ஒரு காலத்தில் சிறந்த ராணுவத் தளபதியாக விளங்கிய ஹென்றி நாக்ஸ் என்பவரின் பெயரில்தான் இந்தக் கோட்டை பெயரிடப்பட்டது. தங்கம் மட்டுமல்ல; அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனம், அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம், லிங்கனின் கெடிஸ்பார்க் உரை, மாக்னா கார்ட்டா (இங்கிலாந்தின் மன்னன் ஜான் பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து அமெரிக்காவை நீக்கிய ஒப்பந்தம்) ஆகியவற்றின் ஒரிஜினல்கள்கூடச் சேமிக்கப்பட்டு வருகின்றன.

Popular Articles

You May Like

More From This Category

More From this Author