

உலகக் கழிவறை நாள்: நவம்பர் 19
இந்தியாவில் 52 சதவீதத்துக்கும் அதிகமானோர் அடிப்படைத் தேவையான கழிப்பறை இன்றி இருப்பதாகக் கடந்த ஆண்டு வெளியான தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அறிக்கை சொல்கிறது.
இந்திய மக்கள்தொகையில் சரிபாதிப் பேர் திறந்தவெளியைத்தான் கழிவறையாகப் பயன்படுத்தி வருகின்றனர். நாட்டின் முன்னேற்றம் என்பது மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாவதில்தான் இருக்கிறது.
இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்துள்ளது என்கிறது ஐநாவின் அறிக்கை. ஆனால், கழிவறைப் பயன்பாடு அந்த அளவில் அதிகரிக்கவில்லை.
மத்திய அரசு கடந்த ஓர் ஆண்டில் மட்டும் ஒரு கோடிக்கு அதிகமான கழிவறைகளைக் கட்டியது. வருங்காலத்தில் கழிவறைப் பயன்பாடு அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கழிவறைப் பற்றாக்குறை அரசுப் பள்ளிகளிலும் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. பல அரசுப் பள்ளிகளில் முறையான கழிவறை வசதி இல்லை.
குறிப்பாகப் பெண்கள் படிக்கும் பள்ளிகளில் கழிவறை அத்தியாவசியமானது.
தண்ணீர்த் தட்டுப்பாடு காரணமாகக் கழிவறை இருந்தும் பராமரிப்பின்றிப் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. அதற்காகத் தண்ணீர் இல்லாத கழிவறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பயன்பாடு பரவலாக வேண்டும். பல வகைக் கழிவறைகள் இங்கே ஒளிப்படங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.