

பெ
ரும்பாலான வீடுகளில் வரவேற்பறையின் மூலைகள் பயன்படுத்தப்படாமல்தான் இருக்கின்றன. அதற்குக் காரணம் அவற்றை வடிவமைப்பதில் எதிர்கொள்ளும் சிக்கல்கள்தான். வீட்டின் உள் அலங்கார வடிவமைப்பைத் திட்டமிடும்போதே மூலையின் வடிவமைப்பைத் திட்டமிட்டால், அந்த இடத்தைத் திறம்படப் பயன்படுத்த முடியும். வரவேற்பறை மூலைகளை வடிவமைப்பதற்கான சில ஆலோசனைகள்...
வீட்டின் வரவேற்பறை மூலையின் கதவுகளை வடிவமைத்து வாசலாக மாற்றிவிடலாம். உட்புறம், வெளிப்புறம் என வித்தியாசமான வடிவமைப்பைச் செய்வதைத் தவிர்க்க முடியும்.
வீட்டின் மூலைகளைப் பயன்படுத்துவதற்காகவே ‘பகுதி சோஃபா’ (Sectional Sofa) வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சிறிய வரவேற்பறைக்கு ஏற்றவையாக இந்தப் ‘பகுதி சோஃபா’ இருக்கும். இந்த சோஃபாவில் ஒரு பகுதியில் தரை விளக்கையோ மேசை விளக்கையோ பொருத்தி அதை வாசிக்கும் இடமாக மாற்றிக்கொள்ளலாம்.
வரவேற்பறை மூலைகளில் ஜன்னல்கள் இருந்தால், அறையின் உயரம், அகலத்தைப் பொறுத்து திரைச்சீலைகள் அமைக்கலாம். இது வரவேற்பறைக்குப் புதிய தோற்றத்தைக் கொடுக்கும்.
வரவேற்பறை மூலையில் உங்கள் ரசனையை வெளிப்படுத்தும்படி ஒரு சிற்பத்தை அமைக்கலாம்.
இயற்கையை விரும்புபவர்களாக இருந்தால், வீட்டின் மூலையில் பெரிய உயரமான செடிகளை வடிவமைக்கலாம். இந்தச் செடிகள் அறைக்குப் பசுமையைக் கொண்டுவரும்.
ஒரு வசதியான நாற்காலி, சிறிய மேசை, படிக்கும் விளக்கு போன்றவற்றை வைத்து வரவேற்பறையின் மூலையை வாசிக்கும் மூலையாக மாற்றிவிடலாம்.
வாசிப்பில் ஆர்வமில்லாதவர்கள், இரண்டு நாற்காலிகள், ஒரு கண்ணாடி வட்ட மேசையை வைத்து வரவேற்பறையில் ஓர் உரையாடல் மூலையை உருவாக்கலாம்.
ஒருவேளை, உங்கள் வீட்டின் வரவேற்பறை மூலை சிறியதாக இருந்தால், அந்தச் சுவரில் ஒரு கண்ணாடியையும் சிறிய மேசையையும் அமைக்கலாம். இது அறையைப் பெரிதாக்கிக் காட்ட உதவும்.
உங்களிடம் பாரம்பரிய அழகுடன் இருக்கும் மர அலமாரி இருந்தால், அவற்றைப் புதிதாக வண்ணமடித்து வரவேற்பறையின் மூலையில் வைக்கலாம். இது அறைக்குள் நுழைபவர்களின் கவனத்தை ஈர்க்கும்.
நீங்கள் புத்தகப் பிரியர் என்றால், வீட்டை வடிவமைக்கும்போதே வரவேற்பறையின் மூலையில் புத்தக அலமாரியை உருவாக்குவதற்குத் திட்டமிடலாம்.
தற்போதைய சமகால வடிவமைக்கப்படும் மூலை ஜன்னல்களை அமைப்பதைப் பற்றியும் பரிசீலிக்கலாம். இந்த மூலை ஜன்னல்கள் அறைக்குப் புதிய தோற்றத்தைக் கொடுக்கும்.