

‘மு
ல்லைக்குப் பெருந்தேர் நல்கிய பறம்பின் கோமான் பாரி’ எனக் கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் கொடைத் திறனைப் பாடுகிறது சிறுபாணாற்றுப்படை. பாடியவர் நத்தத்தனார். அநாதையான முல்லைக்கொடி பற்றிப் படர தனது தேரையே அதற்கு வீடாகக் கொடுத்துவிட்டுச் சென்றவர் பாரி. வள்ளல் பாரியைப் போல் சிறு உயிர்களுக்கு வீடு தர அமெரிக்காவிலுள்ள ஃபிக்ஸ் நேஷன் என்னும் அமைப்பு முடிவெடுத்துள்ளது.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் மிக அதிக அளவில் பூனைகள் ஆதரவின்றி அலைகின்றன. 30 லட்சம் பூனைகள்வரை வீடின்றி அவதிப்படுகின்றன என்கிறது ஓர் அறிக்கை. இந்தப் பூனைகளுக்கு வீடு ஏற்படுத்தித் தருவதற்காக ஃபிக்ஸ் நேஷன் உலகின் முன்னணிக் கட்டுமான நிறுவனங்களைத் தொடர்புகொண்டு பூனைகளுக்கான வீடுகளை வடிவமைத்துத் தரக் கேட்டிருக்கிறார்கள்.
உலகின் பிரம்மாண்டமான கட்டிடங்களை வடிவமைத்த கட்டுநர்கள், இந்தக் குட்டிப் பூனைகளுக்காக வீடு அமைத்திருப்பது அமெரிக்காவில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்காக 13 வீடு மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த வீடு மாதிரிகளை இணையம் வழியாக ஏலத்தில் விட ஃபிக்ஸ் நேஷன் தீர்மானித்திருக்கிறது. இந்த ஏலத்தில் கலந்துகொண்டு இந்தப் பூனை வீடுகளை வாங்கலாம். இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் ஆதரவற்ற பூனைகளுக்கு வீடு உருவாக்கித் தரப் போவதாக ஃபிக்ஸ் நேஷன் அறிவித்துள்ளது.