கட்டுமானம் தாங்கும் கீஸ்டோன்

கட்டுமானம் தாங்கும் கீஸ்டோன்
Updated on
2 min read

ட்டிடங்களுக்கு வளைவுகள் ஒரு தனி அழகைக் கொடுக்கும். ஆனால் இந்த வளைவுகள் எப்படிக் கட்டிடத்தின் அழுத்தத்தைத் தாங்குகின்றன? இதற்கான விடை ‘கீஸ்டோன்’ (Keystone) என்பதில் உள்ளது.

ஒவ்வொரு வளைவின் மிக உச்சமான பகுதியில் இந்தக் கீஸ்டோன் பதிக்கப்படும். கீஸ்டோன் என்பது ஒரு பிரம்மாண்டமான கல். அந்த வளைவின் அழுத்தத்தையும், அதற்கு மேல் உள்ள கட்டிடத்தின் எடையையும் தாங்குவது இதுதான். கீஸ்டோன் இல்லையென்றால் கட்டிடத்தின் அந்தப் பகுதி முழுவதுமாக இடிந்துவிழ வாய்ப்பு உண்டு.

இந்தக் கீஸ்டோன் என்பது பெரும்பாலும் அழகானதாகவும், கவனத்தைக் கவருவதாகவும் இருக்கும். அந்த வளைவின் அழகே இதை மையப்படுத்தித்தான் இருக்கும்.

பழங்காலக் கட்டிடங்களிலுள்ள சில கீஸ்டோன்கள் மிக லேசான அசைவுகளைக் கொண்டிருக்கும்.

கிரேக்கக் கட்டிடங்களில் சில வளைவுகளை வடிவமைத்தது உண்மை. ஆனால் ரோமானியர்கள்தான் கீஸ்டோன்களை வளைவுகளில் முதலில் பொருத்தத் தொடங்கினார்கள். கீஸ்டோனை கேப்ஸ்டோன் (Capstone) என்றும் கூறுவதுண்டு.

கட்டிடங்களுக்கு மட்டுமல்ல பாலங்களிலும் வலுவான வடிவம் கொண்டவற்றை நீங்கள் பார்த்திருக்கலாம். உறுதியாக இருப்பதற்காக இந்தப் பாலங்கள் வளைவான வடிவத்தில் எழுப்பப்பட்டன. இப்படித் தங்களால் வடிவமைக்கப்பட்ட பாலங்களில் ரோமானியர்கள் கீஸ்டோன்களைப் பொருத்தினர். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக எழுப்பப்பட்ட இது போன்ற பாலங்களை இன்றளவும் பார்க்க முடிகிறது.

வளைவுகளுக்கு கீஸ்டோன் மிக அவசியம் என்றோம். எனினும் அந்த வளைவுகளிலேயே அதுதான் அதிக அழுத்தத்தைத் தாங்குகிறது என்பதில்லை (ஏனென்றால் அதுதானே அந்த வளைவின் உச்சத்தில் இருக்கிறது). எனினும் அது உதிர்ந்தால் சீட்டுக்கட்டு மாளிகைபோல வளைவின் பிற கற்களும் விழுந்துவிடும். அழகாகத் தோற்றமளிப்பதற்காக கீஸ்டோன்களைப் பெரிய அளவில் வடிவமைத்தனர். அவற்றில் சிறு சிற்ப வேலைகளைச் செய்வதும் வழக்கமாக இருந்தது.

இந்திய கட்டிடக்கலையில் கொஞ்சம் மெதுவாகத்தான் இந்த வளைவான கட்டுமானங்கள் அறிமுகமாயின. பதினெட்டாம் நூற்றாண்டில் ராஜபுதன அரசர்களும், மராத்திய மன்னர்களும் இவற்றை அழகுபடுத்தினர். எனினும் கோட்டைகளின் கதவுகள் மற்றும் சாளரங்களுக்குதான் அவற்றைப் பயன்படுத்தினர். பின்னர் ஆலயங்களுக்கும், அதற்குப் பின்னால் பிரம்மாண்டமான கட்டிடங்களுக்கும் இது அறிமுகமாயின.

கீஸ்டோன் என்பதை நடைமுறையில் வேறொன்றை உணர்த்தவும் பயன்படுத்துகிறார்கள். ‘Keystone hour’ என்பது உங்கள் உடலும், மனமும் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருக்கும் நேரம். சிலருக்கு இது விடியற்காலையாக இருக்கலாம். சிலருக்கு இது இரவு வேளையாக இருக்கலாம். Keystone hourல் செய்யப்படும் வேலைகள் சிறப்பான விளைவுகளைக் கொடுக்கக் கூடியவை. தொந்தரவாகவும் இல்லாமல் விரைவாகவும், சீராகவும் நீங்கள் பணியாற்றக்கூடிய நேரம்தான் Keystone hour.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in