

கதைகளிலும் திரைப்படங்களிலும்தான் ஓர் ஏழை தன்னுடைய கடினமான உழைப்பால் மிகப் பெரிய கோடீஸ்வரராக உருவாக முடியும் என்பதைப் பொய்யாக்கி, இரண்டு முறை உலக அளவில் கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் ஸோ ஷுன்பெய் (Zhou Qunfei). சீனாவின் பணக்காரப் பெண் என்கிற பட்டத்தோடு, உலக அளவில் சுய முயற்சியால் முன்னேறிய பணக்காரப் பெண்களுள் ஒருவர் என்கிற சிறப்பையும் பெற்றுள்ளார்.
யார் இந்த ஸோ? - சீனாவின் ஹுனான் மாகாணத்தில் 1970இல் ஓர் ஏழைத் தம்பதிக்குப் பிறந்த மூன்றாவது குழந்தைதான் ஸோ. இவருடைய அப்பா பகுதி அளவில் பார்வைக் குறைபாடு கொண்டவர். மூங்கில் கூடைகளையும் நாற்காலிகளையும் பின்னி விற்பனை செய்வதோடு சைக்கிள் பழுது பார்க்கும் பணியையும் மேற்கொண்டு குடும்பத்தை நடத்திவந்தார். 5 வயதில் தாயை இழந்த ஸோ, குடும்பத்தின் பொருளாதாரத் தேவைக்காக வளர்ப்பு விலங்குகளை வளர்த்தார். மூன்று குழந்தைகளில் மிகவும் புத்திசாலியான ஸோவை மட்டுமே உயர்நிலைப் பள்ளி வரைக்கும் படிக்கவைக்க அவருடைய தந்தையால் முடிந்தது.
இதற்கு மேலும் குடும்பத்துக்குக் கஷ்டம் கொடுக்க வேண்டாம் என்று நினைத்த ஸோ, தன் உறவினருடன் புலம்பெயர்ந்த தொழிலாளியாக ஷென்ஸென் நகரத்துக்குச் சென்றார். ஏதாவது ஓர் அரசு வேலையில் சேர்ந்துவிடலாம் என்று நினைத்தவருக்கு, டிப்ளமோகூடப் படிக்காமல் அது சாத்தியமில்லை என்பது புரிந்தது. முழு நேரமாகப் படிக்க வசதியில்லை என்பதால் கிடைத்த வேலைகளைச் செய்துகொண்டு கணக்கியல், கணினி, சுங்க நடைமுறைகள் எனக் குறைந்தகாலப் படிப்புகளைப் படித்து முடித்ததோடு வணிக வாகனங்களை இயக்கும் உரிமத்தையும் பெற்றார்.