

நான் சிறுமியாக இருந்தபோது பல பெண்கள் எழுத்தறிவை அவ்வளவு முக்கியமாக நினைத்திருக்கவில்லை. அதிகம் போனால் பெயர் எழுத, பேருந்தின் பெயர்ப் பலகையை வாசிக்க, செய்தித்தாள்களின் தலைப்புச் செய்தியைப் படிக்க என்பது மட்டுமே அடிமட்ட பெண்களுக்குரிய அதிகபட்சமான படிப்பாக இருந்தது. உண்பதற்கு, உடுப்பதற்கு, சுருண்டு படுப்பதற்கு உறைவிடம் என்பது மட்டுமே அடிப்படைத் தேவையாக இருந்தது அன்று.
இந்த அடிப்படைத் தேவைக்காகப் பெண்கள் சிறுவயதிலே வேலைக்குப் போகும் சூழல் இருந்தது. குடும்பத்தின் வறுமை, உழைப்பைத் தேடிப் போக வைத்தது. குழந்தைகளைப் பெற்றுப் போடுவதோடு பல குடும்பங்களின் கடமை தீர்ந்துபோயிருக்கும். அதற்குப் பிந்தைய வாழ்க்கையைக் குழந்தைகளே தேடி மீட்கும் பொறுப்பு இருந்தது.