

எனக்குக் குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. அடிக்கடி கோபமும் பயமும் ஏற்படுகின்றன. மனச் சோர்வு அதிகரிக்கிறது. இதற்கு என்ன காரணம், எப்படிச் சரிசெய்வது?- ஸ்வாதி, சென்னை.
இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கிறார் ராதா சாகர், பேறுகால ஆலோசகர்.
ஒரு பெண்ணுக்குக் கர்ப்பம்/பிரசவ காலத்துக்குப் பிந்தைய மனநலப் பாதிப்புகள் ஏற்படுவது இயல்பு. இந்தியாவில் பிரசவத்துக்குப் பிந்தைய மனநலப் பாதிப்பு 19% பெண்களுக்கு ஏற்படுவதாக 2025இல் வெளியான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கர்ப்பக் காலத்தில் பெண்களின் அச்சம், கவலை, மனதில் எழும் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வழி தேவை.
அதனால்தான் கர்ப்பக் காலத்தில் குடும்பத்தினரின் ஆதரவு பெண்ணுக்குக் கட்டாயம் வேண்டும் என்கிறோம். குறிப்பாகக் கணவர் உற்ற துணையாக இருப்பது அவசியம். உங்களுக்கு அதீத பயம், பதற்றம் ஏற்பட்டால் மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெறலாம்.
நம் சமூகத்தில் பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் பெண்களின் உடல், மன நலத்துக்குப் போதிய முக்கியத்துவம் கிடைப்பதில்லை. சில பெண்கள் பிரசவத்துக்குப் பிந்தைய மனநிலை மாற்றங்களான (Post-partum Blues) அழுகை, பதற்றம், தூக்கமின்மை, புதிய சூழலுக்குப் பழகுவதில் சிரமம், குழந்தையைப் பராமரிப்பது குறித்த பயம் போன்றவற்றை எதிர்கொள்கிறார்கள்.
இவை பொதுவாகப் பிரசவத்துக்குப் பிறகு சில நாள்களில் தோன்றி இரண்டு வாரங்களுக்குள் குறையலாம். அறிகுறிகள் தீவிரமாக இருந்தாலோ, இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தாலோ மருத்துவரிடம் செல்வது அவசியம். இது Post-partum Depression உள்ளிட்ட பிரச்சினைகளைக் கண்டறிய உதவும்.