

பெண்ணுரிமைக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட பெரியாரின் பெயர் தாங்கிய கோவை பெரியார் அறிவுலகத்தை வடிவமைத்தவர் ஒரு பெண் என்பது நாம் அடைந்திருக்கும் முன்னேற்றத்துக்குச் சான்று.
பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டிருக்கும் துறைகளைத் தாண்டிப் பிற துறைகளில் அவர்கள் தடம்பதிப்பது அரிது. அப்படியோர் அரிய மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறார் கட்டிடக் கலை நிபுணர் பொன்னி ஆஸ்கர். பெண் என்பதாலேயே மறுக்கப்பட்ட படிப்பைப் போராடிப் படித்ததோடு அதில் முத்திரையும் பதித்திருக்கிறார் பொன்னி.
1980களின் மத்தியில் திருச்சி என்ஐடியில் (அப்போது ஆர்இசி) கட்டிடக் கலை பயின்ற ஒரே மாணவி இவர். ஆயிரம் மாணவர்களுக்கு மத்தியில் ஒரே மாணவியாக இருந்தபோது, பெண்களுக்கான போதிய வசதிகள் இல்லாமல் கடும் சிரமத்துக்கு இடையில்தான் பொன்னி இந்தப் படிப்பை முடித்தார். சவாலான சூழலைப் பெண்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதைக் கற்பதற்கான வாய்ப்பாக அதைப் பயன்படுத்திக் கொண்டதாகக் கூறுகிறார் பொன்னி.
போராடிப் பெற்ற பட்டம்: முதுநிலைப் படிப்புக்காக அமெரிக்கா சென்றார் பொன்னி. அப்போது கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டிடக் கலைத் துறையில் முதுநிலை முடித்த முதல் இந்தியப் பெண் என்கிற பெருமையையும் பொன்னி பெற்றார். பின்னர் அங்கேயே பணிபுரிந்ததுடன், கட்டிடக் கலைத் துறையின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு இந்தியா திரும்பினார்.