

ஒரு வங்கியில் பணியாளராகக் காலடி வைக்கும்வரை, நான் ஒரு சாதாரண வாடிக்கையாளராகக்கூட வங்கிக்குள் சென்றதில்லை. இருந்தும், பணத்தைப் பற்றிய அடிப்படை அறிவோ, சேமிப்பின் அவசியமோ தெரியாதவள் அல்ல. ஏனெனில், நம் தேசத்தின் பெரும்பான்மைக் குடும்பங்களில் பொருளாதார ரீதியிலான சவால்கள் எழும்போதெல்லாம் நிதிப் பாதுகாப்பு அரணாகத் திகழ்வது நம் அன்னையரின் சிறுவாடுதான். சிக்கனத்தின் அரும்பெரும் பாடம் பிறப்பிலிருந்தே பெண்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.
இருப்பினும், இந்தச் சிக்கனத்தையும் சேமிக்கும் திறனையும் பெண்கள் எந்த அளவுக்குத் தங்கள் சுய மேம்பாட்டுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று ஆராய்ந்தால் நமக்குக் கிடைப்பது பெரும் அதிர்ச்சியே.