என்று தணியும் இந்தத் தனிமைத் துயர்? | காற்றாய் எழுவேன் 4

என்று தணியும் இந்தத் தனிமைத் துயர்? | காற்றாய் எழுவேன் 4
Updated on: 
3 min read

“அவரை நான் கல்யாணம் செய்துக்கட்டுமா?’’

‘‘ஊஹும், கூடாது, அது தப்பு!’’

‘‘உனக்கு ஒரு அப்பா கிடைப்பார்டா கண்ணா!’’

‘‘என் அப்பா செத்துப்போயிட்டார். நீ என் அம்மா. அம்மால்லாம் தப்புச் செய்யக் கூடாது…’’

எட்டு வயது மகனிடம் மறுமணம் குறித்த தன் விருப்பத்தை ஒரு தாய் பேசுவதாக அமைந்த இந்த உரையாடல், சூடாமணியின் ‘இறுக மூடிய கதவுகள்' சிறுகதையில் இடம்பெற்றது. மகன் சொன்ன வார்த்தைக்கு உடன்பட்டு, தனியொருவராக அவனை வளர்த்து ஆளாக்கிய அந்தத் தாய், இப்போது மருத்துவமனை படுக்கையில் இருக்கிறார். உடனிருக்கும் மகன், தன் தாயின் நல்வாழ்வுக்காகத் திறந்திருந்த மறுமணம் என்னும் கதவைச் சிந்திக்கத் தெரியாத வயதில் தன் பதிலால் இறுக மூடிவிட்டதை நினைத்து வருந்துவதாகக் கதை விரியும்.

தாயின் இலக்கணம்: கணவனற்ற ஒரு பெண்ணுக்கு நேர்ந்த விபத்தைப் பற்றித் தோழி சொன்னார். “அந்தப் பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள். தனக்குப் பழக்கமான நபர் ஒருவரைச் சந்திக்க அவர் சென்னை வந்தபோது, விபத்தில் மரணமடைந்தார். உடற்கூராய்வு முடிந்ததும் உடலைப் பெற்றுக்கொள்ளக் காத்திருந்தனர் பிள்ளைகள். காதலனைப் பார்க்க வந்தபோது ஏற்பட்ட தகராறில் விபத்து நடந்ததாக ஊடகங்கள் செய்தியைப் பரப்ப, பிள்ளைகள் தாயின் சடலத்தை வாங்க மறுத்தனர்.” சடலத்தை வாங்க மறுக்கும் அளவுக்குத் தாயை அவர்கள் ஏன் வெறுத்தனர்?

ஒரு தாய் எப்படி இருக்க வேண்டும் என நம்மிடம் இருக்கும் எதிர்பார்ப்பின் விளைவே அந்த வெறுப்பு. கணவனின்றி வாழ்நாள் முழுவதும் தனித்திருந்தாலும், இன்னோர் ஆணை நேசிப்பதும் மணப்பதும் அவளுக்கு அழகல்ல. குழந்தைகளுக்காகவே வாழ்கிற தியாகத்தின் வடிவுதான் அவள் என்கிற எண்ணம். தந்தைக்குப் பிறகு தாயின் ஒழுக்கத்தைக் கண்காணிப்பவர்களாகக் குழந்தைகள் மாறுகிறார்கள். விதிவிலக்காகத் தாயின் தனிமை சூழும் எதிர்காலம் பற்றிக் குழந்தைகள் அக்கறை கொள்கிறபோது, சமூகம் அவர்களை அச்சுறுத்துகிறது.

Loading content, please wait...

X