புறக்கணிக்கப்பட்ட தெற்கு | பெண்கள் 360

புறக்கணிக்கப்பட்ட தெற்கு | பெண்கள் 360
Updated on
2 min read

தேசிய மகளிர் ஆணையம் சார்பில் அனைத்து மாநிலப் பெண் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அண்மையில் ஹரியாணா மாநிலம் ஃபரீதாபத்தில் நடைபெற்றது. தென்னிந்திய, வடகிழக்கு இந்தியச் சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையையும் மீறிப் பெரும்பான்மையான பயிற்சி வகுப்புகள் இந்தியிலேயே நடத்தப்பட்டன. தொகுதி மறுவரையறை, பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு உள்ளிட்ட கேரளச் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகள் தேசிய மகளிர் ஆணையத் தலைமையால் நிராகரிக்கப்பட்டன. இதனால் அவர்கள் பயிற்சி வகுப்பில் இருந்து வெளியேறினர்.

“சட்ட மன்ற உறுப்பினர்களுக்கான இந்தப் பயிலரங்கில் பள்ளி மாணவர்களே அறிந்துவைத்திருக்கக் கூடிய விஷயங்களான சுய உதவிக் குழுக்கள் என்றால் என்ன, ஒரு புகாரைக் காவல் நிலையத்தில் எப்படிப் பதிவு செய்வது, பெண்களுக்கான அடிப்படைத் திட்டங்கள் போன்றவை குறித்து விளக்கப்பட்டது. உயர்மட்ட அமர்வுகள், கொள்கை வரைவுகள், நிர்வாகத் திறன்கள் போன்றவற்றுக்கான களமாக இது இருக்கும் என எதிர்பார்த்தோம்” என வருத்தத்தோடு குறிப்பிட்டிருக்கிறார் கேரள அமைச்சர் பிந்து கிருஷ்ணா.

எது உண்மையான வளர்ச்சி?

காஞ்சிபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கம் இருளர் காலனியைச் சேர்ந்த ஆனந்தின் மனைவி தேன்மொழி பிரசவத்தின்போது போதிய மருத்துவ உதவி கிடைக்காமல் இறந்துள்ளார். ஆறுமுகம் என்பவரிடம் வாங்கிய ரூ.20,000 கடனுக்காக ஆனந்தின் மொத்த குடும்பமும் ஆறுமுகத்திடம் மரவேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கொட்டகையில் யாரும் இல்லாத நேரத்தில் தேன்மொழிக்குப் பிரசவம் நடந்து, அதில் தாய் – சேய் இருவரும் இறந்துவிட்டனர். பிரசவத்துக்காக தேன்மொழி மருத்துவமனைக்குச் செல்ல ஆறுமுகம் அனுமதிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொழில்நுட்பத்திலும் மருத்துவத் துறையிலும் நாடு பல்வேறு முன்னேற்றங்களைக் அடைந்துள்ளதாக நாம் பெருமைகொள்ளும் நேரத்தில், போதிய மருத்துவ உதவியின்றிப் பழங்குடியினக் கர்ப்பிணியும் சேயும் உயிரிழந்திருப்பது நமது சமூகத்தின் மோசமான ஏற்றத்தாழ்வுகளைச் சுட்டிக்காட்டுகிறது. விளிம்பு நிலை மக்களை வறுமையும் கடனும் எத்தனை இன்னல்களுக்கு ஆளாக்குகின்றன என்பதையும் இந்தத் துயரச் சம்பவம் உணர்த்துகிறது.

ஸ்மிருதியின் புதிய சாதனை!

ஆசியக் கோப்பை டி20 போட்டியில் ஹாங் காங்குக்கு எதிராகச் சதம் எடுத்ததைத் தொடர்ந்து பல சாதனைகளைத் தன்வசமாக்கியுள்ளார் ஸ்மிருதி மந்தனா. சர்வதேசப் பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் உலக அளவில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த நான்காவது வீராங்கனை இவர். இந்தப் போட்டியில் இவர் தனது 18ஆவது சதத்தை எட்டியுள்ளார். இதற்கு முன் 17 சதங்களுடன் முன்னிலையில் இருந்த ஆஸ்திரேலியாவின் மெக் லானிங், தென்னாப்ரிக்காவின் லாரா வால்வர்ட் ஆகியோரை ஸ்மிருதி பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

இதற்கு முன் 10,868 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் முன்னிலையில் இருந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜைப் பின்னுக்குத் தள்ளி, 10,880 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார் ஸ்மிருதி மந்தனா. ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் டி20 போட்டிகளிலே 124 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த தனிநபராகவும் உள்ளார். மகளிர் டி20 போட்டியில் இந்தியாவிலே அதிக முறை சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலில் முன்னணியில் உள்ளார்.

- பிரியா

புறக்கணிக்கப்பட்ட தெற்கு | பெண்கள் 360
கைப்பைக்குள் புத்தகம்! | வாசிப்பை நேசிப்போம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in