

எவரெஸ்ட் சிகரத்தை 52 வயதில் அடைந்திருக்கிறார் சென்னை ஜிஜி மருத்துவமனையின் இயக்குநரும் மூத்த கருத்தரிப்பு சிகிச்சை நிபுணருமான பிரியா செல்வராஜ். 8,000 மீட்டர் உயரமுள்ள இரண்டு சிகரங்களில் ஏழு மாதங்களுக்குள் ஏறிய 50 வயதுக்கு மேற்பட்ட ஒரே இந்தியப் பெண் என்கிற பெருமையையும் இவர் பெற்றிருக்கிறார்.
பல மாத தீவிரமான பயிற்சியும் விடாமுயற்சியும் மருத்துவர் பிரியாவுக்குக் கைகொடுத்திருக்கின்றன. ஏற்கெனவே மனாஸ்லு (8,163 மீட்டர்) சிகரத்திலும் வெற்றிகரமாக அவர் ஏறியிருக்கிறார். மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜாவின் ‘எலைட் எக்ஸ்பெட்’ நிறுவனத்தின் மூலம் பிரியா இந்தப் பயணத்தை மேற்கொண்டார்; அனுபவம் வாய்ந்த உயர்-மலைப் பகுதி வழிகாட்டியான அனுப் குருங் இவருக்கு வழிகாட்டினார். உடல் வலிமை, உடற்தகுதி நிபுணரான டாக்டர் சுகபிரதீப் இதற்கான பயிற்சிகளைத் திட்டமிட்டார்.
அதிக உயரத்தில் மலை ஏறுவதற்குத் தேவையான நீடித்திருக்கும் திறன், உடல் வலிமை, உயரத்திற்கு ஏற்ப உடலை மாற்றியமைத்தல், மன உறுதி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையிலான திட்டம் அது. அவற்றோடு மருத்துவர் பிரியாவின் மன உறுதியும் இணைந்து இந்தச் சாதனையைச் சாத்தியப்படுத்தியுள்ளன.