

டெல்லியில் 24 வயது மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்து 13 ஆண்டுகள் கடந்த நிலையில் மற்றுமொரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
30 வயதுப் பெண் ஒருவர் வேலை முடிந்து இரவு வீடு திரும்பும் வழியில் தனியார் பேருந்துக்குள் வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டு ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார்.
பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட அவர் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்த பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். காயங்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும்படி அறிவுறுத்தினர்.
அந்தப் பெண்ணோ, தன் கணவர் காசநோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் வீட்டில் இருக்கும் தன் மூன்று குழந்தைகளுக்குச் சமைக்க வேண்டும் என்றும் கூறி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
உடலும் உள்ளமும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையிலும்கூடக் குழந்தைகளுக்குச் சமைக்க வேண்டும் என்று அந்தப் பெண் கூறியது ‘பொறுப்பு’ என்கிற பெயரில் பெண்ணின் மீது திணிக்கப்படும் சமூக நிர்பந்தத்தின் வெளிப்பாடு என்கிற குரல்கள் எழுந்தன.
இந்தக் குற்றத்தில் தொடர்புடைய தனியார் பேருந்தின் ஓட்டுநரும் நடத்துநரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொதுவெளியில் பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பலரும் கேள்வியெழுப்பினர்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2024 தரவின்படி பெண்களுக்கு எதிராகக் குற்றங்கள் நடைபெறும் 19 பெருநகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடம் வகிக்கிறது. இந்திய அளவிலும் டெல்லியில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம்.
வாடகைக்கு ஈடாக நடந்த கொடுமை
குஜராத் மாநிலம் மார்பி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் மாதம் 2 ஆயிரம் ரூபாய் வாடகை தர இயலாத நிலையில் தன் மனைவியையும் 13 வயதே நிரம்பிய மகளையும் பாலியல் வல்லுறவு செய்துகொள்ள வீட்டின் உரிமையாளரை அனுமதித்தது பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. அவர்கள் குடியிருந்த வீட்டிலும் வேறோர் இடத்திலும் இந்தக் குற்றச் செயல் தொடர்ச்சியாக நிகழ்ந்துள்ளது.
தன் மகளும் பேத்தியும் தொடர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அம்மா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தக் குற்றத்துக்கு உடந்தையாக இருந்த வாடகைதாரரும் குற்றத்தில் ஈடுபட்ட வீட்டு உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓர் ஆணின் இயலாமை அவனுடைய மனைவியையும் மகளையும் சீரழித்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.