

டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் திருமணத்தை ஒட்டி மணப்பெண்ணுக்குத் திடீர் எடைகுறைப்பு சிகிச்சை நடத்தப்படுவது அண்மைக் காலமாக அதிகரித்திருக்கிறது. திருமணத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே இது தொடங்கிவிடுகிறது. வாரம் ஓர் ஊசியைச் செலுத்திக்கொள்வதன் மூலம் உடல் எடையை அதிரடியாகக் குறைக்கும் பணியில் சில மருத்துவமனைகள் ஈடுபடுகின்றன. சில மருத்துவமனைகளில், ‘மணமகள் எடைகுறைப்பு’க்காகவே சிறப்புத் திட்டங்கள் உள்ளன.
இதில் பயன்படுத்தப்படும் ஊசி மருந்துகள் மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படுபவைதான் என்கிறபோதும் அவற்றின் அளவையும் நீண்டகாலப் பின்விளைவையும் கருத்தில்கொள்ளாமல் சிகிச்சை அளிப்பது தவறு என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வளைந்த இடையும் மெலிந்த தோற்றமுமே மணப்பெண்ணுக்கான இலக்கணம் என்கிற கற்பிதத்துக்காகப் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை விலையாகக் கொடுக்கிறார்கள்.