

ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாத்துக்கு அருகே 25 வயதுப் பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, ஓடும் வாகனத்தில் இருந்து வீசியெறியப்பட்டார். 2025 டிசம்பர் 30 அன்று அதிகாலை நிகழ்ந்த இந்தச் சம்பவம் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்கு உள்ளாக்கியது.
தன் தோழியின் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண்ணுக்கு வேனில் வந்த இருவர் லிஃப்ட் கொடுப்பதாகச் சொல்லி வாகனத்தில் ஏற்றியுள்ளனர். மலைப்பாங்கான பகுதிக்குச் சென்று அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிவிட்டு, ஓடும் வாகனத்தில் இருந்து அவரை வீசியுள்ளனர். குற்றத்தில் ஈடுபட்ட இருவரில் ஒருவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர், மற்றொருவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். வேலையின் நிமித்தம் ஹரியாணாவில் தங்கியுள்ளனர்.
தலையிலும் முகத்திலும் பலத்த காயங்களுடன் போராடிய அந்தப் பெண் தன் சகோதரியை உதவிக்கு அழைத்த பிறகே விஷயம் காவல்துறையின் கவனத்துக்குச் சென்றது. வாக்குமூலம் அளிக்கக்கூட முடியாத அளவுக்கு அந்தப் பெண் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். டெல்லியில் ஓடும் பேருந்தினுள் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட நிர்பயாவுக்கு நேர்ந்த துயரத்தைத்தான் ஹரியாணா பெண்ணின் சம்பவமும் நினைவுபடுத்துகிறது.