

ஒரு பெண்ணின் விருப்பம், சுதந்திரம், தனி உரிமையில் தலையிடுவதற்கான கருவியாகத் திருமணத்தைப் பயன்படுத்தக் கூடாது என கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தன் மனைவிக்கு மாதந்தோறும் 9,000 ரூபாயைப் பராமரிப்புத் தொகையாக வழங்க வேண்டும் என்கிற கீழமை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தை ஒருவர் அணுகினார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பின்போது, ‘ஒரு பெண் தன் பெற்றோர் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பது அவரது தனிப்பட்ட விருப்பம். அதற்காகப் புகுந்த வீட்டில் யாரிடமும் அவர் அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை. பெற்றோரைப் பாதுகாப்பது அவர்களுடைய மகன் அல்லது மகனின் கடமை.
அந்தக் கடமையைச் செய்யும்படி மருமகளையோ மருமகனையோ வற்புறுத்தக் கூடாது. மாமனார், மாமியாரைப் பராமரிப்பது மருமகள்/மருமகனின் தனிப்பட்ட விருப்பமாகவும் தேர்வாகவும் இருக்க வேண்டும்’ என குறிப்பிட்டது. குறிப்பாக, “திருமணம் என்பது இணையரின் தனித்துவம், சுதந்திரம், விருப்பம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவோ அடக்கியாளவோ ஆதிக்கம் செலுத்தவோ அளிக்கப்பட்ட ‘உரிமம்’ அல்ல.
ஓர் உறவுக்குள் பெண்ணின் சுதந்திரம் பாலினத்தின் அடிப்படையில் பறிக்கப்படுவது கண்ணியமான வாழ்க்கையையும் சமூக நீதியையும் வலியுறுத்தும் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. மனைவி என்பவர் வீட்டுவேலைப் பணியாளர் அல்ல. அதேபோல் வீட்டு வேலைகள் பெண்களுக்கானவை மட்டுமல்ல. அவற்றை ஆண், பெண் இருவரும் பகிர்ந்து செய்ய வேண்டும்” என நீதிபதி சில்லாகூர் சுமலதா குறிப்பிட்டார்.