

இன்று பெண்களுக்கான அழகு நிலையங்கள் நகரங்கள்தோறும் செயல்பட்டுவந்தாலும் ‘முடிதிருத்தும் நிலையம்’ என்றதுமே ஓர் ஆணின் சித்திரம்தான் பலரது மனக்கண்ணில் தோன்றும். அந்தச் சித்திரத்தைத் தோற்கடிக்கிற நிதர்சனமாக இருக்கிறார் பொன்மாடத்தி.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர், ஆண்களுக்கான முடிதிருத்தும் கடையை நடத்திவருகிறார். துயரத்தின் விளிம்பில் இருந்துதான் இந்தக் கடையைத் தொடங்கினார். ஆனால், திக்கற்று நிற்கும் பெண்களுக்கான சிறு விளக்காகத் திகழும் அளவுக்குத் தன் உழைப்பால் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறார்.
பொன்மாடத்தி 24 ஆண்டுகளுக்கு முன்பு தீப்பெட்டித் தொழிற்சாலையில் பணிபுரிந்தபோது உடன் பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தியைக் காதலித்து, குடும்பத்தினர் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு இரண்டு மகள்கள். தீப்பெட்டித் தொழிற்சாலையில் கிடைத்த ஊதியம் கட்டுப்படியாகாததால் கடந்த 2010ஆம் ஆண்டு காமநாயக்கன்பட்டியில் கிருஷ்ண மூர்த்தி சொந்தமாக முடிதிருத்தும் கடையைத் தொடங்கி நடத்திவந்தார். இனி தங்கள் வாழ்க்கையில் துன்பத்துக்கு இடமிருக்காது என பொன்மாடத்தி அகமகிழ்ந்தபோதுதான் அந்தத் துயரம் நிகழ்ந்தது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார்.