

எந்த வயதிலிருந்து வாசிக்க ஆரம்பித்தேன் என்று நினைவில் இல்லை. ஆரம்பக்கல்வி மட்டுமே முடித்திருந்தாலும் இன்றைக்கும் நூலகம் சென்று வாசிக்கும் என் அன்னையிடமிருந்து எனக்கும் வாசிப்பு வசப்பட்டிருக்கக்கூடும். பத்து வயதில் 600 பக்கங்களுக்கு மேல் கொண்ட ‘துப்பறியும் சாம்பு’வை ஒரே மூச்சில் வாசிக்க வைத்த தேவன், என் வாசிப்பின் முதல் ஆசிரியர்.
தலைப்பை வைத்துப் புத்தகத்தைத் தேர்வுசெய்த எனக்கு எஸ்.ராமகிருஷ்ணனின் ‘கதாவிலாசம்’ நிறைய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியது. பதின்மத்தின் பிற்பகுதியில் அக உணர்வுகளைக் கவிதையாக எழுதியபோது சுற்றி இருக்கும் இயற்கை, மனிதர்கள், அனுபவங்களிலிருந்தும் கவிதை செய்யக் கற்றுக்கொடுத்தவர்கள் கல்யாண்ஜியும் மனுஷ்யபுத்திரனும்.