

நான் ஒரு தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கிறேன். என் அம்மாவும் அப்பாவும் அவர்களது ஓய்வு நேரத்தில் எப்போதும் ஏதாவது ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய இந்த வாசிப்புப் பழக்கம் எனக்கும் தொற்றிக்கொண்டது. என் அம்மா நூலகத்தில் இருந்து புத்தகம் எடுத்து வரும்போது எனக்கும் சேர்த்தே எடுத்து வருவார். எனக்கு முல்லா கதைகள் என்றால் உயிர். என்னுடைய ஒவ்வொரு நாளின் பொழுது தொடங்குவதும் முடிவதும் முல்லா கதைகளில்தான்.
நான் தினமும் காலையில் எழுந்ததும் முல்லாவின் ஒரு கதையைப் படிப்பேன். அந்தக் கதை எனக்குள் ஏற்படுத்திய உற்சாகத்திலேயே என் படிப்பு வேலைகளைத் தொடங்குவேன். அன்றைய பொழுது முழுவதும் எனக்கு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். பள்ளி முடிந்து வந்ததும் படிப்பு சார்ந்த வேலைகளை முடித்துவிட்டு, இரவு தூங்கும் முன் முல்லாவின் ஒரு கதையையாவது படிப்பேன். அந்த உற்சாகத்திலேயே நான் உறங்கிவிடுவேன். ‘முல்லாவின் தலைப்பாகை, கழுதையில் போன முல்லா, பானையைப் பத்திரமாகப் பார், திருடிய கழுதை, முல்லாவின் முட்டாள்தனம், பாதுஷாவின் கேள்வி, கோழிக்குஞ்சின் ரகசியம்’ போன்ற கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
முல்லாவின் ஒவ்வொரு கதையிலும் நகைச்சுவையும் புத்திசாலித்தனமும் ததும்பும். அதோடு மக்களுக்கு எளிய முறையில் வாழ்க்கைப் பாடங்களையும் ஞானத்தையும் தத்துவத்தையும் போதிக்கக் கூடியவையாகவும் முல்லாவின் கதைகள் இருக்கும். என் ஒவ்வொரு நாளையும் உற்சாகத்துடன் வைத்திருப்பதோடு படிப்பின் மீதான ஆர்வத்தையும் வாசிப்புப் பழக்கம் அதிகப்படுத்துகிறது. - ஆராதனா ராமாமிர்தம், பேரளி, பெரம்பலூர்.