

நான் வாசித்து வியந்த நூல், புலவர் சி. வெய்கைமுத்து எழுதிய ‘பாரதியின் செல்லம்மாள்’. சாதனை படைத்தவர்களிடம் காட்டும் தரிசனத்தை அந்தச் சாதனை படைத்தவர்களின் பின்னால் இருந்து ஊக்குவித்தவர்களிடம் சரித்திரம் காட்டுவதில்லை. ஆனால், பாரதியின் பின்புலத்தில் வெற்றிக்குத் துணையாக நின்ற செல்லம்மாவை முன்னிறுத்தி இந்நூல் எழுதப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
ஏழு வயதில் திருமணம் செய்தபோதே பாரதியின் புரட்சிச் செயலைக் கண்டுகொண்டவர் செல்லம்மாள். தனக்கு ஒரு ‘சாதாரண கணவன்’ கிடைக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டார். அன்றிலிருந்து கணவனின் செயல்களுக்குப் பக்கபலமாக இருந்தார். சிறு சிறு ஊடல்கள், பிரிவுகள் இருந்தாலும் தியாக உள்ளத்தோடு சிறந்த பெண்மணியாக வாழ்ந்தார்.
பாரதியின் இறப்பிற்குப் பின் அவரது படைப்புகளை உலகம் அறியும் வண்ணம் அச்சிலேற்றி மகிழ்ந்தவர் செல்லம்மாள். பெண்ணியச் சிந்தனைகள் மிகுந்த இக்காலக்கட்டத்தில் நாம் எவ்வாறு துணிவுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்பதை இந்நூலின் வழியாகக் கற்றுக்கொண்டேன். எனக்கு வெளி மாவட்டத்தில் வேலை கிடைத்தபோது துணிவு கொண்டு சென்றதற்கு செல்லமாவும் ஒரு தூண்டுகோலே. இன்றும் வாழ்க்கையில் நான் சந்திக்கும் பல பெண்களை பாரதியின் செல்லம்மாவாகவே பார்க்கிறேன்.
கிராமங்களில் பணி செய்ததால் நிறைய சிங்கப்பெண்களைக் கண்டு வியந்திருக்கிறேன். படிக்கும் பருவத்திலேயே காதலித்து மணம் புரிந்துகொண்டாள் மாணவி ஒருத்தி. வேலை வெட்டி இல்லாமல் குடித்துவிட்டு, சீட்டாடிக் கொண்டிருந்த கணவனுக்கும் சேர்த்தே களை எடுக்கும் காட்டு வேலைக்குச் செல்வாள். போதையில் கீழே விழுந்தவன் அழகிய இரண்டு பெண் சிட்டுகளையும் விட்டுவிட்டு காற்றிலே கரைந்துவிட்டான். காட்டு வேலைக்குச் சென்ற பொழுது அந்தப் பெண் மேலே ஆட்டோ கவிழ்ந்து விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிந்தது. உறவினர்களின் பராமரிப்பில் ஆறு மாதங்கள் கரைந்து ஓடின.
மீண்டும் நடப்பாளா என எண்ணியிருந்தேன். அவளோ மீண்டும் வேலைக்குச் சென்று குழந்தைகளைப் படிக்க வைக்கிறாள். வாழ்க்கையில் எத்தனை புயல்கள் அடித்தாலும் அசையாத ஆலமரமாகப் பெண்கள் இருந்தால்தான் நம்மைச் சுற்றியுள்ள விழுதுகளும் வளம் பெறும். ‘உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே’ என்கிற பாரதியின் குரல் அவரது செல்லம்மாவுக்கு மட்டுமல்ல; நமக்கும் சேர்த்தே பொருந்துகிறது.
- சி. பிரபாவதி, தூத்துக்குடி.