

தங்கம் விற்கிற விலைக்கு நகை வாங்குவது கனவாக இருக்கிற நிலையில் ஆடையையே நகைபோல வடிவமைத்து கவனம் ஈர்க்கிறார் சித்ரா லிங்கேஸ்வரன். சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த இவர், ஆரி வேலைப்பாடுகளில் காலத்துக்கேற்ப புதுமையைப் புகுத்தியுள்ளார்.
சித்ராவுக்குச் சிறு வயதிலிருந்தே தையல் வேலைப்பாடுகளில் ஆர்வம் அதிகம் என்பதால், ஃபேஷன் டிசைனிங்கை முறையாகப் படித்தார். தான் கற்றுக்கொண்டதை மற்றவர்களுக்குச் சொல்லி கொடுப்பதற்காக, ‘சித்ரா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெய்லரிங்’ என்கிற பெயரில் பயிற்சி வகுப்பைத் தொடங்கினார். கலைவிற்பன்னர்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்புதானே! தையல் வேலைப்பாடுகளில் சிறந்து விளங்கும் சித்ராவுக்கும் அங்கீகாரம் கிடைக்கத் தவறவில்லை.