

வசந்தா சியாமளம்
தமிழ், இந்தி, சம்ஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேர்ச்சிபெற்றிருந்த மொழிபெயர்ப்பாளர் வசந்தா சியாமளம் (83), ஜனவரி 2 அன்று காலமானார்.
தன் பாட்டி முத்துமீனாட்சியின் பெயரைப் புனைபெயராகக் கொண்டு கதைகள், நாவல்கள் பலவற்றைத் தமிழுக்கும், தமிழிலிருந்து இந்தி, சம்ஸ்கிருத மொழிக்குமாக மொழிபெயர்த்தவர். இவருக்குத் தமிழ்நாடு அரசு சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது வழங்கிச் சிறப்பித்தது.
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி என்கிற சிற்றூரில் பிறந்த வசந்தா, தந்தையின் பணியிடம் காரணமாக மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வளர்ந்தார். பி.எட். வரை படித்து அரசுப் பள்ளி ஆசிரியை ஆனார். எழுத்தாளர் காஸ்யபனை (சியாமளம்) மணந்துகொண்டு தமிழ்நாட்டுக்குத் திரும்பினார்.