

‘ஒரு நேரத்தில் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்வார்கள். அந்தக் கூற்றை அடித்து நொறுக்கியிருக்கிறேன்’ என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த தியானா டெய்லர். அவர் சொல்வது உண்மைதான். பாடகர், பாடலாசிரியர், நடிகர், மாடல், நடனக் கலைஞர், நடன இயக்குநர், இசை வீடியோ இயக்குநர் எனப் பன்முகக் கலைஞராகத் திகழ்கிறார் தியானா. இந்த ஆண்டின் சிறந்த பெண் என்று அங்கீகரிக்கப்பட்டு, ‘டைம்’ இதழின் அட்டையையும் அலங்கரித்திருக்கிறார்!
இத்தனை துறைகளில் கால்பதித்து, வெற்றிகரமாக வலம்வருவதற்குக் கைகொடுத் திருக்கிறது அவருடையை இருபது ஆண்டுகாலக் கடின உழைப்பு. ஒற்றைப் பெற்றோராக அம்மாவால் வளர்க்கப்பட்ட தியானா, குடும்பத்தின் பொருளாதாரத் தேவைக்காக மிக இளம் வயதிலேயே பாடவும் நடனமாடவும் ஆரம்பித்துவிட்டார். அவருடைய நடனத்தால் கவரப்பட்ட பிரபல பாடகியும் நடிகையுமான பியான்ஸே, தனக்குக் குறிப்பிட்ட வகை நடனத்தைச் சொல்லிக்கொடுக்கும்படி அழைத்தார். ஆனால், பியான்ஸேயின் ஆல்பம் முழுவதற்கும் நடன இயக்குநராக மாறினார் தியானா. அப்போது அவருக்குப் பதினைந்து வயதுதான்!