

பிரச்சினைகளைப் பற்றித்தான் நாம் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறோம். இதைத் தொடர்ந்து படித்துவரும் நண்பர்களில் சிலர், “இயற்கையாக ஏற்படும் பிரச்சினைகளை நமக்குச் சாதகமாக, ஆக்கபூர்வமான நிகழ்வாக ஆக்கி வாழ்க்கையில் வெற்றிபெறுவது நம் கையில்தான் இருக்கிறது என்று சொன்னீர்கள். மிக்க மகிழ்ச்சி.
ஆனால், நாமாக உண்டாக்கிக்கொள்ளும் பிரச்சினையையும் பிரச்சினையே இல்லாதபோது அது இருப்பதாக எண்ணிக்கொள்வதால் வரும் பிரச்சினையையும் நாம்தான் சமாளிக்க வேண்டும் என்கிறீர்களே. இது ரொம்பவும் கஷ்டமான காரியம் அல்லவா? என்ன செய்ய வேண்டும் என்கிற தெளிவு பலருக்கு இருக்குமா?” என்று கேட்கிறார்கள். வாஸ்தவம்தான். எதையுமே சொல்வது எளிது, அதைச் செய்வது கடினம். ஒப்புக்கொள்கிறேன். இருப்பினும் முயன்றால் முடியாதது இல்லை.