

இந்தத் தொடரில் நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது ஒவ்வொருவருக்கும் சுயமரியாதை, தன்னம்பிக்கையோடு கூடிய பண்பான வளர்ச்சி தேவை என்பதைத்தான். வேலைக்குச் செல்லும் பெண்களின் இரட்டைச் சுமை குறித்து இந்த வாரம் சிந்திப்போம். வீட்டிலும் அலுவலகத்திலும் வேலை செய்வதை ஏன் இரட்டைச் சுமை என்று சொல்ல வேண்டும்? இந்தப் பெண்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான். சுயபச்சாதாபம் கூடாது. யாருக்காக உழைக்கிறோம்? அந்தப் பணத்தை யாருக்குக் கொடுக்கிறோம்? அடுத்த வீட்டுக்குக் கொடுக்கிறோமா அல்லது கோயில் உண்டியலில் போட்டுவிடுகிறோமா?
மனம்விட்டுப் பேசுங்கள்: உங்கள் குடும்பத்துக்கு நீங்கள் சம்பாதிக்கும் பணத்தின் தேவை இருக்கிறது. குழந்தைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும், வீடு வாங்க வேண்டும், வாகனம் வாங்க வேண்டும், வசதியாக வாழவேண்டும். ஆக, ஏதோ ஒரு காரணத்துக்காகப் பொருளாதார தேவைக்காக வேலைக்குச் செல்கிறோம். ஒட்டுமொத்தமாக எல்லாரையும் நான் குறிப்பிடவில்லை. சிலர் ஆத்ம திருப்திக்காகவும் வேலைக்குச் செல்லலாம். எதுவாக இருப்பினும் நமக்கு விளையக்கூடிய பயனுக்காக வேலைக்குச் செல்லும்போது எதற்காக இந்தச் சுயபச்சாதாபம் நண்பர்களே.