

இப்போது இரண்டாம் வகை பிரச்சினைகளைப் பார்க்கலாம். நாம் ஒவ்வொருவரும் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள்தான் இவை. படித்தவர்கள் - படிக்காதவர்கள், விவரம் தெரிந்தவர்கள் - தெரியாதவர்கள், கிராமத்தினர் - நகரத்தினர் என யாராக இருந்தாலும் நமக்கு நாமே உண்டாக்கிக்கொள்ளும் பிரச்சினைகள்தான் அதிகம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். நம் அறியாமையின் காரணமாகவோ அல்லது தெரிந்தேதானோ சில காரியங்களைச் செய்துவிட்டு, பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறோம். நாம்தான் நம் பிரச்சினைக்கு மூலகாரணம் என்பதை ஏனோ நாம் புரிந்துகொள்வதே இல்லை.
டிரைவிங் லைசென்ஸ் வாங்கி சில நாள்களே ஆன என் சிநேகிதியிடம், சந்தடி நிறைந்த ஒரு தெருவைக் குறிப்பிட்டு, “இந்தத் தெருவில் உன்னால் தைரியமாக காரோட்ட முடியுமா?” என்று யாரோ சவால்விட்டிருக்கிறார்கள். இவள் என்ன சொல்லியிருக்க வேண்டும்? “நான் இப்போதுதான் டிரைவிங் லைசென்ஸ் எடுத்திருக்கிறேன்; எனக்கு இன்னும் கொஞ்சம் அனுபவம் வேண்டும்” என்று சொல்லி மறுத்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால், அப்படிச் சொல்லாமல் வீம்பாக வீராப்புடன் காரை அந்தத் தெருவில் ஓட்டி சாலையைக் கடந்துகொண்டிருந்த ஒரு முதியவர் மேல் இடித்துவிட, காவல்துறை வழக்குப் பதிவுசெய்துவிட்டது. பெரும் பிரச்சினை.