

கடந்த 39 வாரங்களாகக் குழந்தை வளர்ப்பில் பாகுபாடு, மாதவிடாய், ஆண் – பெண் நட்பு, கணவன் – மனைவி உறவு, நேர மேலாண்மை, தற்கொலை, மனக்குழப்பம், குடிநோய், முதுமையை எதிர்கொள்வது, முடக்கும் நம்பிக்கைகள் என நம் வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்களைப் பற்றிச் சிந்தித்தோம். கடந்த வாரம் சுயபச்சாதாபத்தைத் தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் தெரிந்துகொண்டோம்.
இது இறுதி அத்தியாயம் என்பதால் சுய அலசலையும் சுய விமர்சனத்தைப் பற்றியும் புரிந்துகொண்டு அவற்றைக் கடைப்பிடிப்பது நம் வாழ்க்கைக்கு எப்படி உதவும் என்பதைப் பார்க்கலாம். ஒரு நபர் முக்கியமாக ஒரு பெண் தான் யார், தன்னுடைய விருப்பு, வெறுப்புகள் என்ன, தன்னால் என்னென்ன சாதிக்க முடியும் – முடியாது, உடலும் மனமும் எந்த அளவுக்குப் பக்குவப்பட்டிருக்கின்றன என்பது போன்ற விவரங்களை எல்லாம் கற்றுக்கொள்ள சுய அலசலும் சுய விமர்சனமும் வெகுவாக உதவுகின்றன என்பது என் சொந்த அனுபவம்.
ஒரு முறை சின்ன ஊரில் அவர்களுடைய நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுத்தபோது என் உரையை நிகழ்த்திய பிறகு சேர்ந்து உணவருந்திய தருணத்தில் அங்கிருந்த பெண்களிடம், “சுய அலசல் என்றால் என்னவென்று தெரியுமா?” என்று கேட்டேன். “எங்களுக்கு எல்லாம் என்ன தெரியும்? நாங்கள் கிராமத்துவாசிகள், அதிகம் படிக்காதவர்கள்” என்று பதில் கூறினர்.
“சுய அலசல் செய்துகொள்ள மெத்தப் படித்திருக்க வேண்டும் என்று உங்களுக்கு யார் சொன்னது?” என்று எதிர்கேள்வி கேட்டவள், பக்கத்தில் நின்றிருந்த பெண்ணிடம், “நாம் சாப்பிடும்போது எனக்கு வயிற்றில் புண் இருக்கிறது; அதனால், மிளகாய் சாப்பிட மாட்டேன் என்று சொன்னீர்கள் அல்லவா” என்றேன். “ஆமாம்” என்றார். அடுத்தவரிடம், “வெயிலில் அதிகம் நிற்க மாட்டேன், போக மாட்டேன் என்று கூறினீர்கள் அல்லவா?” என்று கேட்டேன். “ஆமாம். வெயிலில் போனால் ஒற்றைத் தலைவலி கண்டிப்பாக வரும்” என்று தயங்காமல் கூறினார். இன்னொருவரிடம், “உங்களுக்குச் சர்க்கரை வியாதி. சர்க்கரை சேர்த்துக்கொள்ள மாட்டீர்கள்தானே?” என்றேன். அவரும், “ஆமாம்” என்றார்.