

கடந்த பல வாரங்களாகத் தற்கொலையைப் பற்றியும், அதற்கான காரணம் என்ன, அந்த எண்ணம் தோன்றினால் என்ன செய்வது எனப் பல விஷயங்களைச் சிந்தித்தோம். பிரச்சினை இல்லாத வாழ்க்கையே இல்லை நண்பர்களே. வீட்டுக்கு வீடு வாசப்படி எனக் கேள்விப்பட்டிருக்கிறோம்தானே. எனக்கு வாழ்க்கையில் பிரச்சினையே இல்லை என்று யாராவது சொன்னால் அவர்கள் ரொம்ப பாசிட்டிவ்வாக இருக்க முயற்சி செய்கிறார்கள் என்றுதான் அர்த்தமே தவிர, அவர்கள் இதுவரை எந்தப் பிரச்சினையையும் கடந்துவரவில்லை என்று அர்த்தமல்ல.
உங்களுக்குத் தெரிந்த ஒரு கதையை நினைவூட்டுகிறேன். இறந்த தன் மகனை எடுத்துக்கொண்டு புத்தரிடம் ஒரு தாய் வந்தார். “நீங்கள் பெரிய மகான் என்று சொல்கிறார்கள். எதை வேண்டுமானாலும் செய்வீர்கள் என்கிறார்கள். என் ஒரே மகன் இறந்துவிட்டான். தயவுசெய்து இவனை உயிர்ப்பித்துக் கொடுங்கள்” என்று கேட்டார். புத்தர் புன்முறுவலோடு, “அதற்கென்னம்மா, செய்துவிட்டால் போகிறது. இது காலை நேரம். நீ ஊருக்குள் சென்று எந்த வீட்டில் இதுவரை மரணம் ஏற்படவில்லையோ அந்த வீட்டில் இருந்து ஒரு பிடி எள் வாங்கிக்கொண்டு வா. மாலை சூரியன் மறைவதற்குள் நீ வந்துவிட்டால் உன் மகனை உயிர்ப்பிக்கிறேன்” என்று சொன்னாராம்.