

என் மருத்துவ நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, “மனநோயாளிகள் மட்டும்தான் தற்கொலை செய்துகொள்கிறார்களா என்று என்னிடம் நிறைய பேர் கேட்பார்கள்” என்று அவர் சொன்னார். தவறு, மனநோயாளிகளாக இருக்கும் அத்தனை பேரும் தற்கொலை செய்துகொள்வதுமில்லை; தற்கொலை செய்துகொள்ளும் அனைவரும் மனநோயாளிகளும் இல்லை. தற்காலிகமான மனச்சோர்வு, பயம் எல்லாம் ஒன்றுசேர்ந்து மன அழுத்தமாக மாறும்போது சிலர் இந்த முடிவுதான் தனக்குத் தீர்வு என்று நினைத்து விபரீத முடிவை எடுத்துவிடுகிறார்கள்.
மனநோய் உள்ளவர்கள்தான் தற்கொலை செய்து கொள்வார்கள் என்றால், நாம் கடந்த வாரங்களில் பார்த்த மனிதர்கள் அப்படிப்பட்டவர்களா? ஐ.ஏ.எஸ். அதிகாரியாகி, இந்திய நாட்டுக்கே பொருளாதார ஆலோசகராக ஆகவேண்டும் என்று ஆசைப்பட்ட 18 வயதுப் பெண், “அம்மா காலேஜுக்குப் போய்விட்டு வருகிறேன்” என்று காலையில் சந்தோஷமாகச் சொல்லிவிட்டுச் சென்ற பெண், ஏன் திடீரென்று மாடியில் இருந்து குதித்துத் தன்னை மாய்த்துக்கொள்ள வேண்டும்?. அவள் இப்படியொரு முடிவுக்கு வர எது அவளுக்கு உந்துதல் கொடுத்தது என்று தெரியவில்லை என்று அவளுடைய அப்பா, அம்மா என்னிடம் சொல்லி மிகவும் வருத்தப்பட்டார்கள்.